நண்பேன்டா! ‘தோஸ்த்’ துருக்கிக்கு இந்தியாவிலிருந்து நீளும் உதவிக்கரம்

இடிபாடுகளில் சிக்கி, உதவிக்காக காத்திருக்கும் குழந்தைகள்
இடிபாடுகளில் சிக்கி, உதவிக்காக காத்திருக்கும் குழந்தைகள்

நட்பு தேசமான துருக்கியில் நிலநடுக்கத் துயரம் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே உதவிக்கரம் நீட்டிய இந்தியா, அன்றே பேரிடர் மீட்பு படையுடன் துருக்கியில் இறங்கியது. இந்தியாவின் ஆபத்து கால உதவிக்கு துருக்கி உருக்கத்துடன் நன்றி தெரிவித்திருக்கிறது.

நூற்றாண்டுகளில் மோசமான நிலநடுக்கத்துக்கு துருக்கி ஆளாகியுள்ளது. இரண்டாவது நாளாக நிலநடுக்க அச்சம் தொடர்வதன் மத்தியில், இடிபாடுக்கு இடையே சிக்கிய மக்களை காப்பாற்றுவது, மருத்துவ சிகிச்சை அளிப்பது, உணவுத் தேவைகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட அவசரகாலத் தேவைகளின் நெருக்கடியால் துருக்கி தடுமாறித் தவிக்கிறது.

இதனையடுத்து சர்வதேச சமூகங்கள் துருக்கியை நோக்கி உதவிக் கரங்களை நீட்டி வருகின்றன. துருக்கியில் நிலநடுக்கம் நேர்ந்த உடனேயே தன்னுடைய வருத்தத்தை பிரதமர் மோடி பதிவு செய்ததோடு, உடனடி உதவிக்கும் உத்தரவாதமளித்தார்.

துருக்கி நோக்கிய, இந்தியாவின் பேரிடர் மீட்புக்குழு
துருக்கி நோக்கிய, இந்தியாவின் பேரிடர் மீட்புக்குழு

அதன்படி, இடிபாடுகளில் சிக்கிய மனிதர்களை மீட்கும் பணியில் தேர்ச்சி பெற்ற 100 வல்லுநர்கள் அடங்கிய அவசரக் குழு அங்கே அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பேரிடர் காலத்தில் விரைந்து செயலாற்றும் மோப்ப நாய்களும் அடங்கும். இதுதவிர மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுகளும் அடுத்தடுத்து வழங்கப்பட்டு வருகின்றன.

துருக்கி தூதரை நேரில் சந்தித்தித்த இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன்
துருக்கி தூதரை நேரில் சந்தித்தித்த இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன்

இந்தியாவின் ஆபத்துக்கு உதவும் பாங்கினை மெச்சிய துருக்கி, தோழமை தேசத்துக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்திருக்கிறது. அதில் இந்தி மற்றும் துருக்கியில், தோழன் என்று ஒரே பொருள்படும் ’தோஸ்த்’ என்று இந்தியாவை விளித்திருக்கிறது. இது குறித்த பதிவினை வெளியிட்ட இந்தியாவுக்கான துருக்கியின் தூதர் பிராத் சுனெல், ஆபத்து காலத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்ற பழமொழியையும் பகிர்ந்துள்ளார். முன்னதாக தூதரக அலுவலகத்தில் இவரை நேரில் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வி.முரளிதரன் துருக்கியின் துயரங்கள் மற்றும் தேவைப்படும் உதவிகளை கேட்டறிந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in