
கோவை விமானநிலையத்திலிருந்து இன்று காலையில் சார்ஜா புறப்பட்ட விமானத்தில் கழுகு மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக 164 பயணிகள் உயிர் தப்பினர்.
கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் 23 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் 66 முறை விமானங்கள் வந்து செல்கின்றன. சார்ஜாவிற்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது கோவை விமான நிலையத்தில் தான் விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இதையடுத்து ஒவ்வொரு முறை விமானங்கள் தரையிறங்கும் போதும், புறப்படும் போதும் பறவைகள் மோதாமல் இருக்க 8 ஊழியர்கள் பறவை, முயல், மயில் உள்ளிட்ட வனஉயிரினங்களை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாதந்தோறும் சராசரியாக 3 அல்லது 4 முறை விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க சிறிய பட்டாசுகளை வெடிக்க செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல சமயங்களில் இந்த பறவை விமான இயக்கத்தின் போது வெளியேறும் புகை மற்றும் அனல் தாக்கத்தில் இறந்துவிடும்.
இந்நிலையில் கோவையில் இருந்து சார்ஜா செல்லும் விமானம் இன்று காலை 7 மணிக்கு வழக்கம் போல 164 பயணிகளுடன் சார்ஜா கிளம்பியது. அப்போது விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே விமானத்தில் இடது எஞ்சினில் 2 கழுகுகள் சிக்கியது. இதையடுத்து விமானி அவசர அவசரமாக கோவை விமான நிலையத்திலேயே விமானத்தை தரையிறக்கினார். இதையடுத்து அங்கிருந்த பொறியாளர்கள் உடனடியாக சென்று ஆய்வு செய்த போது எஞ்சினில் இறந்த நிலையில் ஒரு கழுகு இருந்தது. கழுகு மோதியதில் விமான எஞ்சின் பழுதானதாக தெரிகிறது. அவற்றை பொறியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 164 பயணிகள் உயிர் தப்பினர்.