செத்து விழும் பன்றிகள்: முதுமலையில் பரவும் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல்

செத்து விழும் பன்றிகள்:  முதுமலையில் பரவும் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல்

முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால் பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதால் வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள முதுமலை புலிகள் காப்பகமும், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகமும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 10 நாட்களில் 27 பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதனால் வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து இறந்த பன்றிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இந்திய கால்நடை ஆய்வு மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைககப்பட்டது. இந்த ஆய்வில் பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தான் அடிக்கடி பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் அது பரவத் தொடங்கி உள்ளதால் வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் இந்நோய் மேலும் பரவாத வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் நோய் என்பது பன்றிகளுக்கு மட்டுமே பரவக் கூடியது, மனிதர்களுக்கு பரவாது. அதேபோல் மற்ற விலங்குகளுக்கும் பரவாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் முதல் முதலாக 1920-ம் ஆண்டில் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பிற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in