சிறையில் இருந்தே ஸ்கெட்ச்; உதவி ஜெயிலரை கொல்ல முயன்ற ரவுடி அறையில் செல்போன்: சோதனையில் அதிர்ந்த காவலர்கள்

சிறையில் இருந்தே ஸ்கெட்ச்; உதவி ஜெயிலரை கொல்ல முயன்ற ரவுடி அறையில் செல்போன்: சோதனையில் அதிர்ந்த காவலர்கள்

கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் சென்னை எண்ணூரைச் சேர்ந்த கைதி தனசேகரனிடம் இருந்து நேற்று இரவு மீண்டும் ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டிருப்பது சிறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியான எண்ணூர் தனசேகரன் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் சிறையில் இருந்தவாறே தமிழகத்தில் செல்போன் மூலம் பல்வேறு குற்ற செயல்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதனால் கடந்த மாதம் 8-ம் தேதி அவரது அறையில் நடத்தப்பட்ட சோதனையில் செல்போன், சார்ஜர், பேட்டரி ஆகியவை கைப்பற்றப்பட்டன. சிறையில் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தனசேகரனுக்கு உடந்தையாக இருக்கும் நிலையில் அந்த சோதனையில் முக்கியமானவராக விளங்கியவர் உதவி ஜெயிலர் மணிகண்டன். அதனால் அவரிடம் மிக கடுமையாக தனசேகரன் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி அதிகாலை சிறை வளாகத்தில் இருக்கும் சிறை அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள மணிகண்டனின் வீட்டில் பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர். தீ பரவுவதற்குள் மணிகண்டன் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்து விட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த கடலூர் முதுநகர் காவல் நிலைய போலீஸார், விசாரணை நடத்தி சிறை வார்டன் செந்தில்குமார் மற்றும் சென்னை சேர்ந்த வழக்கறிஞர் ஆகியோரை கைது செய்தனர். அத்துடன் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தனசேகரனின் ஆட்களான 3 பேரை தேடி வந்தனர். அவர்களும் நேற்று சரணடைந்தனர்.

இந்நிலையில் நேற்று திடீரென கடலூர் மத்திய சிறையில் அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது. அந்த சோதனையில் தனசேகரன் செல்போன் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் சிறைக்குள் மீண்டும் செல்போன் வந்தது எப்படி என்று விசாரணையை தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டுக்கு தீவைப்பு சம்பவத்தில் சிறை வார்டன் உடந்தையாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் செல்போனை சிறைக்குள் கொண்டு வந்திருப்பதற்கும் சிறைக்குள் இருக்கும் காவலர்களே காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுவதால் சிறைத்துறை வட்டாரம் அதிர்ந்து போயுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in