ராட்சத அலையால் கவிழ்ந்த படகு; இரு மீனவர்கள் மீட்பு, ஒருவர் மாயம்: 10 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றபோது துயரம்

மீனவரை தேடி கரையில் காத்திருக்கும் சக மீனவர்கள்
மீனவரை தேடி கரையில் காத்திருக்கும் சக மீனவர்கள்

சீர்காழி அருகே இன்று காலை கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  படகில்  இருந்த மூவரும் கடலில் விழுந்தனர்.  அவர்களில்  இருவர் சக மீனவர்களால் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்ட நிலையில் ஒருவர் மாயமாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.  இந்த நிலையில் இன்று மீனவர்களுக்கு கடலுக்குள் செல்ல மீன்வளத்துறையால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதனையடுத்து மீனவர்கள் இன்று காலை  கடலுக்கு சென்றனர். 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கொட்டாய்மேடு கிராமத்தை சேர்ந்த பெருமாள் (43), அதே கிராமத்தை சேர்ந்த நடராஜன், சூரியமூர்த்தி ஆகியோர் இன்று காலை  பைபர் படகில் மீன் பிடிக்க புறப்பட்டனர். கரையில் இருந்து 1 கி.மீ. தூரம் சென்ற அவர்கள் அங்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது திடீரென கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சில அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலை இவர்களின்  படகை புரட்டிப் போட்டது.  படகு கவிழ்ந்ததில் மீனவர்கள் 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். தங்களை காப்பாற்றுமாறு கூக்குரல்  எழுப்பினர். அந்த இடத்திற்கு அருகில்  மற்றொரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த  மீனவர்கள்  உடனடியாக விரைந்து வந்து மீனவர்களை காப்பாற்ற முயற்சியில் இறங்கினர்.

பெருமாள்
பெருமாள்

நடராஜன், சூரியமூர்த்தி ஆகிய இருவரை மட்டுமே அவர்களால்  மீட்க முடிந்தது. கடலில் மூழ்கிய பெருமாள் மாயமானார். சிறிது நேரம் அவரைத் தேடிய சக மீனவர்கள் நடராஜன், சூரியமூர்த்தி கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் கவிழ்ந்த பைபர் படகை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து காயமடைந்த நடராஜன், சூரியமூர்த்தியை  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும்  பெருமாள் மாயமானது குறித்து  கடலோர காவல் குழும போலீஸாரிடம் கிராமத்தினர்  தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து மீனவர்கள் உதவியுடன், கடலோர காவல் படை குழும போலீஸார்  கடலில் மூழ்கி மாயமான பெருமாளை தேடி வருகின்றனர். இன்று மதியம் வரை பெருமாளை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது. 

இதற்கிடையே பெருமாள்  கதி என்ன ஆனது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் கலங்கிப் போயுள்ளனர். படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி மீனவர்  மாயமான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in