
வரி ஏய்ப்பு கூட்டு சதியில் ஈடுபட்டதாக தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே செம்பொன்குடியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (38). இவர் போகலூர் ஒன்றியம் கீழம்பல் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த செப்.5-ம் தேதி இவர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றார். இந்த நிலையில் வரி ஏய்ப்பு கூட்டு சதியில் ஈடுபட்டதாக ராமச்சந்திரனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இவரது அண்ணன் பஞ்சாட்சரம் மதுரை, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் டேக்ஸ் இன்பர்மேஷன் நெட்ஒர்க் நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் மூலம் இவர், வருமான வரி கணக்கு விண்ணப்பிப்போருக்கு குறைவான கணக்கு காட்டி பணம் திரும்ப பெற்று கொடுத்து வந்துள்ளார்.
2.84 கோடி திரும்ப பெற்றுக்கொடுத்தது தொடர்பாக இவர் மீது வருமான வரித்துறையினர் புகாரளித்தனர். இதன் பேரில் கடந்த 2021-ம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் பஞ்சாட்சரம் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணை அடிப்படையில், பஞ்சாட்சரத்தை கடந்தாண்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இதன்பின் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
இந்நிலையில், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரன் வங்கிக் கணக்கிற்கு பஞ்சாட்சரம் 12 லட்சம் அனுப்பினார். இருவருக்கும் வங்கி மூலம் பண பரிவர்த்தனை குறித்து விசாரிக்க ராமச்சந்திரனை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்து மதுரை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.