ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: தச்சங்குறிச்சியில் சாலையில் படுத்து மக்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: தச்சங்குறிச்சியில் சாலையில் படுத்து மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் மற்றும்  ஜல்லிக்கட்டு வீரர்கள் இரவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு  பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

தச்சங்குறிச்சி   - இன்று காலை
தச்சங்குறிச்சி - இன்று காலை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயத்தின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜனவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்தாண்டு அரசின் பல்வேறு நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தால் காலதாமதமாக ஜன.13-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

அதனால் இந்த ஆண்டு உரிய நாளில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி விட வேண்டும் என்று முடிவு செய்த விழா குழுவினர் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து போட்டிக்கான அனுமதி,  மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் நேற்று முன்தினம் வரை ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனுமதியை அரசு வழங்கவில்லை. இதனால் இந்த ஆண்டும் ஜன.1-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று  (ஜன.5 ) ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்த விழா குழுவினர் நேற்று மீண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு இன்று போட்டி நடைபெறுவது குறித்து தகவல் தெரிவித்தனர். 

அதையடுத்து ஏற்பாடுகளைப் பார்வையிட  மாவட்ட நேற்று மாலை  கலெக்டர் கவிதாராமு, போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட கால்நடைத்துறை அலுவலர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தச்சங்குறிச்சிக்கு வந்து ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பிறகு அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை சரிவர செய்து முடிக்காத காரணத்தால் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்க முடியாது என்றும், வேறு ஒரு தேதிக்கு மாற்றிக்   கொள்ளுமாறும் ஆட்சியர் தெரிவித்தார்.

அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்க தயாராக இருந்த நிலையில் திடீரென நேற்று இரவு மீண்டும் அனுமதி மறுத்திருப்பதால்  அதிர்ச்சியடைந்த கிராமமக்கள் ஒன்று கூடி செங்கிப்பட்டி-கந்தர்வகோட்டை சாலையில் படுத்தும், அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியரும், கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மாறனும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

ஆனால் மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள் இன்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கினால்தான் மறியலை கைவிடுவோம் என மறியலை தொடர்ந்தனர். அதனையடுத்து அதிக அளவில் போலீஸார் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த மக்களை அப்புறப்படுத்தினர்.

எப்போதும் நடத்தும் அதே இடத்தில்தான் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும், போட்டிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் தொடர்ந்து வந்து ஆய்வு செய்தவாறு இருந்தனர். ஆனால் திடீரென வந்து இடத்தை மாற்ற வேண்டும், வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கூறுவதில் உள்நோக்கம் இருப்பதாகவும் தச்சங்குறிச்சி கிராம மக்கள் சோகத்துடன் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in