
மாநிலத்தில் நிலவும் மோசமான குளிர் சூழல் காரணமாக, 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது ஜார்கண்ட் அரசு.
வட இந்தியாவில் அதிகரிக்கும் குளிர் காரணமாக அங்கே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, பொது நிகழ்வுகள் உட்பட பலவும் தடுமாற்றங்களுக்கு ஆகி வருகின்றன. ஞாயிறு நிலவரப்படி அங்கே 7 முதல் 10 வரையிலான டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவுகிறது. கடும் குளிர் காரணமாக மனித உயிர்கள் பலியான தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே அதிகரிக்கும் குளிர் காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான பாதிப்புகளை கருத்தில் கொண்டு மாநில அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதியவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருப்பதால், அவர்களுக்கு குளிர் தாக்குதல் என்பது ஒப்பீட்டளவில் குறைவே. பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளதால், சிறு குழந்தைகள் கடும் குளிருக்கு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதனை தவிர்க்க ஜார்கண்ட் அரசு புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இதன்படி மழலையர் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு ஜன.14 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில் ஊசலாடும் கடும் குளிரிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் ஜார்கண்ட் அரசு அறிவுறுத்தி உள்ளது.