இறுதி ஊர்வலமும் இன்னலோடு தானா?: மழைநீர் வாய்க்காலில் பிணத்தைச் சுமந்து செல்லும் அருந்ததிய மக்கள்!

உடலை வாய்க்கால் வழியாக எடுத்துச் செல்கின்றனர்.
உடலை வாய்க்கால் வழியாக எடுத்துச் செல்கின்றனர்.

பழநியில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்ததை அடுத்து கணக்கன்பட்டி கிராமத்தில் இறந்தவரின் உடலை வாய்க்காலைக் கடந்து எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

பழநி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பழநியில் உள்ள பல்வேறு வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், பழநியை அடுத்த கணக்கன்பட்டி கிராமத்தில் உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலைப் புதைப்பதற்காக உறவினர்கள் வாய்க்கால் கரை ஓரத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். மழையின் காரணமாக வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி இருந்ததால் இறந்தவரின் உடலை தூக்கிச் சென்றவர்கள் தண்ணீரைக் கடந்து சென்று அடக்கம் செய்தனர். தற்போது, இது குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தண்ணீரில்  இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் அவரது உறவினர்கள்.
தண்ணீரில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் அவரது உறவினர்கள்.

கணக்கன்பட்டி கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தினர் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தனி இடுகாடு இல்லாததால் வாய்க்கால் கரை ஓரங்களில் அடக்கம் செய்து வருகின்றனர். மழைக்காலங்களில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய, மிகுந்த சிரமம் ஏற்படுவதால் கணக்கன்பட்டி கிராமத்தில் தனி இடுகாடு ஏற்படுத்தி தரவேண்டும் என பழநி வருவாய்த்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in