டெல்டாவில் தொடரும் கனமழை: மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

டெல்டாவில் தொடரும் கனமழை: மூன்று மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு விடுமுறை!

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் அந்தமான் அருகே ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அத்துடன் நான்கு நாட்களுக்கு மழை தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தவாறு நேற்று முதல்  டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பொழிந்தது.

அதிலும் குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று இரவில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் மழை தொடர்ந்து நீடிப்பதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்திலும்  அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார். இடைவிடாமல் நீடிக்கும் கனமழையால் விவசாய பயிர்கள் மூழ்கியுள்ளன.  இந்த மாவட்டங்களில் உள்ள நகரங்களில் தீபாவளியை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து வந்து தரைக்கடை  அமைத்திருக்கும் சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு ஆயத்தமாக வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம்  புயலாக உருவெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் விளைவாக தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது என ஒன்றிரண்டு நாட்களில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in