வட மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை!- இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

வட மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை!- இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தில்  பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழை பொழிந்து வருகிறது. அதிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாத மழையால்   மக்களின் இயல்பு வாழ்க்கையும்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் எட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அது  நேற்று 9 மாவட்டங்களாக  உயர்ந்தது. மூன்று தினங்களாக மழை குறையாத காரணத்தால் இன்று கனமழை பெய்திருக்கக் கூடிய மற்றும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கக் கூடிய மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தஞ்சையில் சதய விழாவை முன்னிட்டு ஏற்கெனவே உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தவிர புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக  சீர்காழியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.  கொள்ளிடத்தில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சை, அரியலூர், கரூர், நீலகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த மூன்று தினங்களாக பெருமழை பெய்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில்  இன்று ஆங்காங்கே லேசான மழை மட்டுமே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளதால் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in