இடி விழுந்த அதிர்ச்சியில் கொத்தாக உயிரிழந்த வாத்துகள்: அம்பாசமுத்திரத்தில் பரிதாபம்

இடி விழுந்த அதிர்ச்சியில் கொத்தாக உயிரிழந்த வாத்துகள்: அம்பாசமுத்திரத்தில் பரிதாபம்

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதில் இடி மற்றும் மின்னல் விழுந்த அதிர்ச்சியில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த வாத்துகள் கொத்தாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த நல்லக்கண்ணு, சின்ன அழகு ஆகியோர் சொந்தமாக ஆயிரத்திற்கும் அதிகமான வாத்துகள் வைத்துள்ளனர். இவர்கள் நெல் அறுவடை முடிந்த வயல்களில் கிடை போட்டு வருவாய் ஈட்டி வந்தனர். தாங்கள் கிடை போடச் செல்லும் ஊர்களிலேயே வாத்து முட்டை வியாபாரமும் செய்வது வழக்கம். இவர்கள் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்போது அறுவடை முடிந்திருப்பதால் அங்கு கிடை முறையில் வாத்துகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.

அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சிலதினங்களாகவே நல்லமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நல்லகண்ணுவும், சின்ன அழகும் வாத்துகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரென நல்லமழையும், இடி, மின்னலும் வெட்டியது. இதனால் நல்ல கண்ணுவும், சின்ன அழகும் அருகில் இருந்த ஒரு கொட்டகையில் ஒதுங்கினர். அப்போது வாத்துகள் மேய்ந்து கொண்டிருந்த பகுதியில் பலத்த சத்தத்துடன் இடி விழுந்தது. இந்த சப்தம் கேட்ட அதிர்ச்சியில் இடி மேலே விழாமலேயே 20க்கும் அதிகமான வாத்துகள் இறந்தன. இதேபோல் திடீரென கேட்ட பேரிரைச்சலுக்கு 300க்கும் அதிகமான வாத்துகள் மயங்கின. அவை அரைமணி நேரத்திற்கு பின்பே எழும்பின.

சத்தம் கேட்டே வாத்துகள் இறந்த சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் அப்பகுதிவாசிகள் வந்து இறந்துகிடந்த வாத்துகளைப் பார்த்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in