
கணவர் குடித்துவிட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் வீட்டு அருகில் இருக்கும் டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் கம்பியைத் தொட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், பேயன்விளையை அடுத்த காணியாளன் தெருவைச் சேர்ந்தவர் தாமஸ்துரை(25). கோழிக்கடையில் இறைச்சி வெட்டிக் கொடுக்கும் வேலைசெய்து வந்தார். இவருக்கும் வரண்டியவேல் கிராமத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி(22) என்பவருக்கும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. தாமஸ்துரைக்கு தீராதக் குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி சண்டை, வாக்குவாதம் நடப்பது வழக்கம்.
இந்தநிலையில் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த தாமஸ்துரையை அவரது மனைவி திட்டினார். அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த தாமஸ் துரை, உடனே குடிபோதையில் தன் வீட்டை விட்டு வெளியே வந்தார். வாசலில் இருந்த டிரான்ஸ்பார்மரில் விறு, விறுவென மேலே ஏறியவர் உயர்மின் அழுத்தக் கம்பியில் கை வைத்தார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மின்சாரம் தாக்கி அவர் உயிர் இழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.