
ஏர் இந்தியா விமான பயணத்தின்போது, சக பெண் பயணி மீது சிறுநீர் பெய்த போதை ஆசாமிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
நியூயார்க் - டெல்லி மார்க்கத்தில் ஏர் இந்தியா விமானத்தின் பிசினஸ் கிளாஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த பயணத்தின்போது, போதை ஆசாமி ஒருவர் சக பயணிகளில் ஒருவரான மூதாட்டி மீது சிறுநீர் பெய்துள்ளார். மூதாட்டி சத்தமிட்டதை தொடர்ந்து சக பயணிகள் விமான சிப்பந்திகளை அழைத்து முறையிட்டுள்ளனர். ஆனால் நிறை போதையில் இருந்த அந்த ஆசாமியை எப்படி கையாள்வது என்று தெரியாது விமான பணிப்பெண்கள் விழித்தனர்.
இதற்கிடையே இன்னொரு சக பயணி தானாக முன்வந்து, போதை ஆசாமியை ஆடைகளை சரி செய்யுமாறு அறிவுறுத்தி அமரச் செய்திருக்கிறார். விமான சிப்பந்திகள் மாற்று ஆடைகள் மற்றும் காலணி வழங்கி அப்போதைக்கு பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உதவியுள்ளனர். ஆனால், குறிப்பிட்ட சம்பவத்தை முறையாக விமான சிப்பந்திகள் எதிர்கொள்ளவில்லை என்றும் அதற்கான பயிற்சி மற்றும் அறிவுறுத்தல் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சம்பவம் தொடர்பான பொதுவெளி பதிவுகளின் மத்தியில், பாதிக்கப்பட்ட பெண்மணி டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு கடிதம் மூலம் முறையிட்ட பிறகே நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நவ.26 அன்று நடைபெற்ற இந்த சம்பவத்துக்கு தற்போது காவல்துறை வழக்கு முதல், போதையில் தவறிழைத்த ஆண் பயணிக்கு, விமான பயணங்களில் குறிப்பிட்ட காலத்துக்கு தடை விதிப்பது வரை பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.