
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்துவிட்டு, விசயம் வெளியில் கசியாமல் இருக்க சடலத்தை எரித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இவ்விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் கரையடி சுடலைமாட சுவாமி கோயில் அருகில் சுடுகாடு ஒன்று உள்ளது. இங்கு பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்றுக் கிடப்பதாக சாத்தான்குளம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் போலீஸார் அங்குசென்று பார்த்தபோது, அங்கு பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடந்தது. போலீஸார் அந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்து, பாதி எரிந்த நிலையில் கிடந்தது நாசரேத், சாலை தெருவைச் சேர்ந்த கூலித் தாெழிலாளி கண்ணன்(50) எனத் தெரியவந்தது. சாத்தான்குளம் அருகில் உள்ள தஞ்சைநகரம் தாவீது(25), திசையன்விளையைச் சேர்ந்த டேனி செல்வன்(22) ஆகியோருடன், கண்ணன் சுடுகாட்டுப் பகுதியில் போய் மது அருந்தியுள்ளார். போதையில் கண்ணன் இருவரையும் தவறாகப் பேசியுள்ளார். இதனால் கோபம் அடைந்த தாவீதும், செல்வனும் கல்லால் அவரைத் தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவர் உடலுக்கும் தீவைத்துவிட்டு தப்பியோடி உள்ளனர். இதில் கண்ணன் உயிர் இழந்தார். இதுகுறித்து விசாரித்த சாத்தான்குளம் போலீஸார் தாவீது, டேனி செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.