போதையில் 2 இளம்பெண்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து கலாட்டா... பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்!

போதையில் 2 இளம்பெண்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து கலாட்டா... பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்!

இருசக்கர வாகனத்தில் உரசி சென்றதை கேட்ட நபரை காவல் நிலையம் புகுந்து இளம் பெண்கள் தாக்கினர். தடுக்க வந்த பெண் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேரை தலைமுடியை இழுத்து அடித்து கலாட்டா செய்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை வடபழனி கவரைத் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி சவரி பிச்சை(45). இவர் வடபழனி ஆற்காடு சாலையில் சொந்தமாக மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அந்தோணி சவரி பிச்சை வேலையை முடித்து விட்டு அசோக்நகர் மூன்றாவது அவென்யூ வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள் அந்தோணியின் இருசக்கர வாகனத்தை உரசி சென்றனர். இதனால் கோபமடைந்த அந்தோணி அவர்களை திட்டியதால் இரு பெண்களும் அந்தோணியை மடக்கி ஆபாச வார்த்தைகளால் திட்டி இருசக்கர வாகனத்தின் சாவியை பறித்து கொண்டனர்.

உடனே அந்தோணி அருகில் இருந்த அசோக்நகர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். அப்போது, இரு பெண்களும் அவரை பின்தொடர்ந்து சென்று, காவல் நிலையத்தில் புகுந்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

இதனை பார்த்த உதவி ஆய்வாளர் ஹேமலதா, காவலர் ராணி மற்றும் காவலர் ராம்குமார் ஆகியோர் தடுக்கச் சென்ற போது இரு பெண்களும் சேர்ந்து உதவி ஆய்வாளர் ஹேமலதா தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் காவலர்களையும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் காவல்நிலையம் சிறிது நேரம் கலவர பூமி போல் காட்சியளித்தது. உடனே சக காவலர்கள் இரண்டு பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அசோக்நகர் பகுதியை சேர்ந்த சோனா (23) மற்றும் பிரியா (22) என்பதும், அவர்கள் இருவரும் போதையில் இருந்ததும் தெரிய வந்தது. மேலும் இருவரும் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் இரு பெண்களின் பெற்றோர்களையும் வரவழைத்து அவர்களை ஒப்படைத்ததுடன் இன்று காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

போதையில் இரு பெண்கள் காவல் நிலையத்தில் புகுந்து உதவி ஆய்வாளர் தலைமுடியை இழுத்து அடித்த சம்பவம் காவல்துறையினரிடேயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in