தமிழகத்தில் போதைப் பொருள் சப்ளை: ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை

நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்றம் தீர்ப்பு

கொகைன், கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்க முயன்ற வழக்கில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் போதைப் பொருள் விற்கப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, கடந்த 2019 செப்டம்பர் 17-ம் தேதி இரவு, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ககோசா ஸ்டெல்லா என்பவரை வழிமறித்து, மாஜிஸ்திரேட் நீதிமன்ற அனுமதியுடன் சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் இருந்து 3 கிராம் கொகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அவரை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் வசித்து வந்த மற்றொரு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த அஜா காட்வின் சுக்வூவின் வீட்டில் நடத்திய சோதனையில் 7 கிராம் கொகைனும், ஒன்றரை கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன. காட்வின், போதைப் பொருளைக் கடத்தி வந்து, ஸ்டெல்லா மூலம் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இரு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமகள், இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.மேலும், காட்வினுக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், ஸ்டெல்லாவுக்கு 75 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in