கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை: தண்ணீரில் கலந்து ஊசியில் ஏற்றும் கொடூரம்

கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை: தண்ணீரில் கலந்து ஊசியில் ஏற்றும் கொடூரம்

சென்னையில் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து ஒரு கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், அவர்களைப் பிடிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மதுவிலக்கு போலீஸார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது தாம்பரம் பகுதியில் மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்த பாலாஜி என்ற மிட்டாய் பாலாஜி(26), மேற்கு தாம்பரம் காந்தி நகர் 2வது தெருவைச் சேர்ந்த அஜய் என்ற அஜித் குமார்(22), கடப்பேரி நேரு நகரைச் சேர்ந்த சச்சின் என்ற காளியா(22) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 53 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்‌

இதுகுறித்து தனிப்படை போலீஸார் அவர்களிடம் விசாரணை நடததிய போது, ஹைதராபாத்தைச் சேர்ந்த புரோக்கர்கள் மூலம் தூக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை ரயிலில் வாங்கி வந்து விற்பது தெரிய வந்தது. 100 மாத்திரைகளை அங்கு 8000 ரூபாய்க்கு வாங்கி வந்து சென்னையில் ஒரு மாத்திரையை 350 ரூபாய்க்கு இந்த கும்பல் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இந்த மாத்திரைகளை நீரில் கலந்து ஊசியாக செலுத்தி போதைக்கு அடிமையானதும் தெரிய வந்தது. அவர்கள் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in