தினமும் லட்சக்கணக்கில் டெபாசிட்; அதிகாலையில் காத்திருந்த போலீஸ்; 2.10 லட்சத்துடன் வந்த ஓட்டுநர் சிக்கினார்

தினமும் லட்சக்கணக்கில் டெபாசிட்; அதிகாலையில் காத்திருந்த போலீஸ்; 2.10 லட்சத்துடன் வந்த ஓட்டுநர் சிக்கினார்

ஏடிஎம்மில் ஒரு லட்சம் டெபாசிட் செய்தால் ரூபாய் 100 கமிஷன் என்ற ஆசையில் ஓராண்டியாக சென்னையின் பல்வேறு வங்கி ஏ.டி.எம்.லிருந்து லட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்து வந்த நபரை பிடித்துள்ளனர் காவல்துறையினர். அமலாக்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் டாக்டர் அழகப்பா சாலையிலுள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் தினந்தோறும் ஒரு நபர் 2 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை பணம் செலுத்துவதாக மும்பையிலுள்ள எஸ்பிஐ வங்கி தலைமை அலுவலகத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஒரே நபர் தான் தினமும் சரியாக 6 மணிக்கு ஏடிஎம்மில் பணம் செலுத்தி வந்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தலைமை அலுவல அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் நேற்று காலை 5.50 மணிக்கு சம்பவயிடத்திற்கு சென்று போலீஸார் அந்த நபருக்காக காத்திருந்தனர். அப்போது சரியாக 6 மணிக்கு 2.10 லட்சம் பணத்தை ஏடிஎம்மில் செலுத்திவிட்டு வெளியே வந்த அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த நபர் புளியந்தோப்பு பகுதியை சாயின்ஷா (29) என்பதும் இவர் ராபிட்டோ வாகனம் ஓட்டுநராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

மேலும் அவரது பையை சோதனை செய்த போது 6 லட்ச ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் பாரிமுனையை சேர்ந்த பர்வீஸ் என்பவர் தினமும் தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, அவர் சொல்லும் வங்கி எண்ணுக்கு பணத்தை அனுப்ப சொல்லியதாகவும் அப்படி அனுப்பினால் ஒரு லட்ச ரூபாய்க்கு 100 ரூபாய் கமிஷன் கிடைக்கும் என பிடிபட்ட சாயிஷா தெரிவித்துள்ளார்.

பர்வீஸ் கொடுக்கும் பணத்தை பிரித்து கீழ்ப்பாக்கம், பெரியமேடு, செனாய் நகர், அண்ணா நகர், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பிரித்து அனுப்பி வந்துள்ளதாகவும், கடந்த ஓராண்டாக இதேபோல் பணத்தை அனுப்பி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கீழ்ப்பாக்கம் போலீஸார், அமலாக்கத் துறையினருக்கு தகவல் தெரிவித்து சாயின்ஷாவை அவர்களிடம் ஒப்படைத்தனர். அமலாக்க துறையினர் சாயின்ஷாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாரிமுனையை சேர்ந்த பர்வீஸ் என்பவரை கீழ்ப்பாக்கம் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in