
வளர்ச்சியடைந்த நவீன இந்தியாவுக்காக கனவு காணுங்கள் என குழந்தைகள் தினத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டும், குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சந்தித்து வாழ்த்து தெரிவித்து, மாணவ, மாணவியருடன உரையாடினார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, ”குழந்தைகளிடம் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் நல்ல அறிவு உள்ளது. அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். நம் குழந்தைகளின் திறமைக்கு ஏற்ப சமூகத்தில் அவர்களை நல்ல இடத்திற்கு கொண்டு செல்வது அனைத்து பெற்றோர்களின் பொறுப்பாகும். குழந்தைகள் நாட்டின் எதிர்காலம். அவர்களைப் பாதுகாப்பது அனைவரின் கடமை” என்றார்.
மேலும், “குழந்தைகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவே அவர்களை உயிர்ப்புடன் ஆக்குகிறது. இன்று நாம் குழந்தைகளின் இந்த அப்பாவித்தனத்தையும் கள்ளம், கபடமற்ற தூய்மையையும் கொண்டாடுகிறோம். மற்றவர்களின் துக்கத்தைக் கண்டு குழந்தைகள் துக்கமடைகிறார்கள்.
மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். குழந்தைப் பருவம் என்பது வாழ்க்கையின் மிக அழகான கட்டம். அந்த கட்டத்தில் மனதில் பதிவதும், பழக்க வழக்கங்களும், அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும்” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “குழந்தை பருவத்திலிருந்தே மற்றவர்களுக்கு உதவவும், சுற்றுச்சூழலின் மீது அன்பு செலுத்தவும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம். இந்திய கலாச்சாரத்துடனான பிணைப்பு, பெற்றோரையும் பெரியோரையும் மதிப்பது போன்றவற்றை குழந்தைகளிடம் விதைக்க வேண்டும். பின்னர், அந்த விதை வளர்ந்து செடியாகி, மரமாகி குடும்பத்துக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும். குழந்தைகள் விடா முயற்சியுடனும் கடின உழைப்புடனும் தங்கள் இலக்கை நோக்கி நகர்ந்தால் எளிதில் இலக்கை அடைய முடியும்.
நாட்டின் எதிர்காலமே உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இலக்குகளை பெரிதாக வைத்துக் கொள்ளுங்கள். பெரிதாக கனவு காணுங்கள். அந்த இலக்கை நோக்கி முன்னேறுங்கள். நவீன, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க கனவு காணுங்கள். உங்கள் கனவு கைகூடும். நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்” என்று பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
சிவகாசி : தீபாவளிக்கு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!
நாளை தெறிக்கப் போகுது தமிழகம்... 234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி!
பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் விவசாயிகள் கண்ணீர்!