`இந்தப் படம் வெளியானால் சாதி, மத மோதல் ஏற்படும்': கிடுகு-சங்கிகளின் கூட்டம்' படத்துக்கு தடை கோரி திவிக புகார்

`இந்தப் படம் வெளியானால் சாதி, மத மோதல் ஏற்படும்': கிடுகு-சங்கிகளின் கூட்டம்' படத்துக்கு தடை கோரி திவிக புகார்

`கிடுகு - சங்கிகளின் கூட்டம்' என்ற திரைப்படத்தை தடை செய்யக்கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

தயாரிப்பாளர் ராமலட்சுமி என்பவர் தயாரிப்பில் இயக்குநர் வீர முருகன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `கிடுகு - சங்கிகளின் கூட்டம்'. இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளியானது. திரைப்பட முன்னோட்டக் காட்சிகளில் பெரியார் குறித்தும், திமுக அரசு குறித்தும் அவதூறாக சித்தரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் தமிழகத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் எனவும் இந்த திரைப்படத்தை தடை செய்யக் கோரி சென்னை காவல் ஆணையரகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் இன்று புகார் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, "கிடுகு - சங்கிகளின் கூட்டம்" என்ற திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகளில் பல இடங்களில் திமுக அரசையும் தந்தை பெரியாரையும் அவதூறாக சித்தரித்து இயக்குநர் காட்சிப்படுத்தி உள்ளார். குறிப்பாக சில காட்சிகளில் "சாதியை ஒழிப்பதற்காக தாலி கட்டுவான் பின்பு மூடநம்பிக்கை ஒழிப்பதற்காக தாலியை அறுப்பான் இதுதான் திராவிட மாடல்" என குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரமே வேண்டாம் என்று சொன்ன ராமசாமி நாயகருக்கு தமிழ்நாட்டில் எதற்கு சிலை என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் வெளியானால் தமிழகத்தில் சாதி, மத மோதல்கள் ஏற்பட்டு அமைதி சீர்குலையும். எனவே திரைப்படத்தை தடை செய்யக்கோரி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளோம். தமிழகத்தில் இந்து, கிறித்தவ, இஸ்லாமிய மற்றும் சாதிய மோதல்களை உருவாக்க முயற்சிக்கும் "கிடுகு - சங்கிகளின் கூட்டம்" திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராமலட்சுமி மற்றும் இயக்குநர் வீர முருகன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளித்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in