கூலிப்படையை ஏவி மகனைக் கொன்ற நகைக்கடை அதிபர்: காணாமல் போனதாக நாடகமாடியதால் போலீஸ் அதிர்ச்சி

அகில் ஜெயின்
அகில் ஜெயின்

மகனை கூலிப்படையை ஏவி கொலை செய்து விட்டு காணவில்லை என நாடகமாடிய கர்நாடகாவின் பிரபல ஜூவல்லர்ஸ் உரிமையாளர் போலீஸாரின் பிடியில் சிக்கியுள்ளார். அவரது வாக்குமூலத்தின்படி கூலிப்படையைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்ததுடன், கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலைத் தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம், ஹூப்ளியின் பிரபல தொழிலதிபரும், மகாவீர ஜூவல்லர்ஸ் உரிமையாளருமான பாரத் ஜெயின் தனது மகன் அகில் ஜெயின் (30) டிசம்பர் மாதம் முதல் காணாமல் போய் விட்டதாக கேஷ்வாபூர் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகள், அகிலின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்திய போதும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

பாரத் ஜெயின் குடும்பத்திற்கு வந்த செல்போன் எண்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. பாரத் ஜெயினுக்கு வந்த செல்போன் அழைப்புகளில் பிரபல கூலிப்படையினர் பலர் பேசியது தெரிய வந்தது. அகில் காணாமல் போனதற்கு முன்பு பல முறை அவர்கள் பாரத் ஜெயினுடன் செல்போனில் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து பாரத் ஜெயின் மீது போலீஸாருக்கு சந்தேக நிழல் விழுந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.

கூலிப்படையை ஏவி தனது மகனைக் கொலை செய்ததாக பாரத் ஜெயின் ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கூலிப்படையைச் சேர்ந்த இருவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். தேவார குடிஹாலாவில் உள்ள பாரத் ஜெயினின் பண்ணை வீடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகில் ஜெயினின் உடலை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் கேஷ்வாபூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக அகில் ஜெயின் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. அவர் உடல் கிடைத்த பின் அதற்கான விடை கிடைக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in