மருமகளுக்கு கருணை வேலைக்கு தடையாக இருந்த மாமியார் கொடூரக்கொலை: தடுத்த வீட்டு ஓனரும் உயிரிழந்த சோகம்

  கொலை
கொலை மருமகளுக்கு கருணை வேலைக்கு தடையாக இருந்த மாமியார் கொடூரக்கொலை: தடுத்த வீட்டு ஓனரும் உயிரிழந்த சோகம்

கருணை அடிப்படையிலான வாரிசு வேலையை இறந்தவரின் மனைவிக்கு ஒதுக்குவதா? அல்லது பேரனுக்கு ஒதுக்குவதா? என்பது குறித்து சிவகாசியில் குடும்பத்தினருக்குள் நடந்த பேச்சுவார்த்தையில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி முருகேஸ்வரி(50) . இந்தத் தம்பதியின் மகனான ரவி, மாநகராட்சியில் ஓட்டுநராக இருந்தார். இவருக்கு திருமணம் முடிந்து ரதி லெட்சுமி என்னும் மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளன. ரவி கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு திடீரென உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது வேலை, அவரின் வாரிசுகளில் ஒருவருக்கு வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த ரவியின் மனைவி, ரதி லெட்சுமி அந்த வேலையைத் தனக்கு வழங்குமாறு கேட்டார். ஆனால் ரவியின் தாய் முருகேஸ்வரி, தன் இன்னொரு பேரன் ஒருவருக்கு அந்த வேலையை வழங்க வேண்டும் என்றார். இதனால் வாரிசு வேலையை யாருக்கு வழங்குவது எனச் சிக்கல் எழுந்தது.

இதனால் மாமியார் முருகேஸ்வரிக்கும், மருமகள் ரதி லெட்சுமிக்கும் இடையே தொடர்ந்து சண்டை இருந்துவந்தது. ஏற்கெனவே பலமுறை இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்களுக்குள் சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக சிவகாசி ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள முனியப்பன் என்னும் உறவினர் வீட்டில் வைத்து முருகேஸ்வரி, ரதி லெட்சுமி தரப்பினருக்கு இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் ரதி லெட்சுமியின் சகோதரர் காளிராஜனும் கலந்து கொண்டார். அவர் பேச்சுவார்த்தையின் போது கோபம் அடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், தன் சகோதரியின் மாமியார் முருகேஸ்வரியை சரமாரியாகக் குத்தினார்.

இதைத் தடுக்க முயன்ற பேச்சுவார்த்தை நடந்த வீட்டின் உரிமையாளர் முனியப்பனின் மனைவி தமயந்தி கருப்பாயி(60) மீதும் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இருவர் கொல்லப்பட்ட பின்பு கொலையாளி காளிராஜன் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்துத் திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாரிசு வேலை பேச்சுவார்த்தையில் இரட்டைக் கொலை நடந்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in