போன் அழைப்பை எடுக்கவில்லை; நள்ளிரவில் தேடிய‌ உறவுகள்: பெண் விவகாரத்தில் நடந்த இரட்டைக்கொலை

கொலை
கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பால் வியாபாரிகள் இருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். நேற்று நள்ளிரவு நடைபெற்ற இந்தக் கொலையில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம். நொச்சிகுளத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் ஆனந்த்(26) பால் வியாபாரம் செய்து வந்தார். இவருடன் இவரது உறவினர் சூரியராஜ்(17) என்பவரும் இதே தொழில் செய்துவந்தார். இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் போய் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பால் எடுத்துவிட்டு இரவு 11 மணிக்கு வீட்டுக்குத் திரும்புவது வழக்கம். இந்த பாலை மறுநாள் காலையில் வினியோகம் செய்வர். ஆனால் நேற்று இரவு இவர்கள் இருவரும் பால் எடுக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. போனில் அவர்களை அழைத்தபோதும் எடுக்கவில்லை. இதுகுறித்து ஊத்துமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

போலீஸார் நள்ளிரவு 1 மணிக்கு அவர்களது உறவினர்களையும் அழைத்துக்கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பலபத்திரராமபுரம் காட்டுப்பகுதியில் ஆனந்த், சூரியராஜ் இருவரும் இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். ஆனந்திற்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பெண் விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாகத் தெரியவந்தது. அதன் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீஸார் யூகிக்கின்றனர்.

இதேபோல் ஆனந்திற்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தொழில் போட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்துபிடிக்க வலியுறுத்தி ஆனந்த், சூரியராஜின் உறவினர்கள் ஊத்துமலை சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பால் வியாபாரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நொச்சிகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in