
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பால் வியாபாரிகள் இருவர் கொடூரமாக நேற்று முன்தினம் நள்ளிரவு கொலை செய்யப்பட்டனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கும் தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இதில் எதற்காக கொலை செய்யப்படுகிறோம் என்னும் காரணமே தெரியாமல் சிறுவர் ஒருவரும் உயிர் இழந்துள்ளார்.
தென்காசி மாவட்டம், நொச்சிகுளத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் ஆனந்த்(26). பால் வியாபாரம் செய்து வந்தார். இவருடன் இவரது உறவினர் சூரியராஜ்(17) என்பவரும் இதே தொழில் செய்துவந்தார். இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் போய் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பால் எடுத்துவிட்டு இரவு 11 மணிக்கு வீட்டுக்குத் திரும்புவது வழக்கம். இந்த பாலை மறுநாள் காலையில் வினியோகம் செய்வர். ஆனால் நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் பால் எடுக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. போனில் அவர்களை அழைத்தபோதும் எடுக்கவில்லை. இதுகுறித்து ஊத்துமலை காவல் நிலையத்தில் அவர்களது உறவினர்கள் புகார் கொடுத்தனர்.
போலீஸார் நள்ளிரவு 1 மணிக்கு அவர்களது உறவினர்களையும் அழைத்துக்கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பலபத்திரராமபுரம் காட்டுப்பகுதியில் ஆனந்த், சூரியராஜ் இருவரும் இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். ஆனந்திற்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பெண் விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாகத் தெரியவந்தது. அதன் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீஸார் யூகித்து அதன் அடிப்படையில் தேடி வந்தனர். இந்தக் கொலை வழக்கில் கங்கணாகிணறு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார்(30), அவரது நண்பர் சுதாகர்(22) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இதில் கொலை செய்துவிட்டு திருச்செந்தூரில் மொட்டையடித்துவிட்டுச் சுற்றிவந்த செல்வகுமாரை போலீஸார் நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்புதான் இன்று கைது செய்தனர். அவர் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், “என் மனைவிக்கும் பால் வியாபாரி ஆனந்திற்கும் இடையே தவறான தொடர்பு ஏற்பட்டது. இதை கண்டித்தும் இருவரும் கேட்கவில்லை. இதனிடையே என்னிடம் சண்டைபோட்டுவிட்டு என் மனைவி சங்கரன்கோயிலில் இருக்கும் அவரது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்தக் கோபத்தில் ஆனந்தை கொலை செய்ய நண்பன் சுதாகருடன் சுத்தியலுடன் காத்திருந்தேன். பால் எடுத்துவிட்டு வரும் போது ஆனந்தோடு பைக்கில் 17 வயது சிறுவன் சூரியராஜிம் இருந்தார். முதலில் சூரியராஜின் பின் தலையில் சுத்தியலால் அடித்தோம். அவர் சுருண்டு விழுந்து இறந்தார். இதைப் பார்த்ததும் ஆனந்த் ஓடினார். தொடர்ந்து ஆனந்தையும் துரத்திச் சென்று சுத்தியலால் அடித்துக் கொலை செய்தோம். ஆனந்தோடு வந்ததாலேயே சிறுவன் சூரியராஜையும் கொலைசெய்ய வேண்டியதாகி விட்டது” என தெரிவித்தார்.
கள்ளக்காதல் விவகாரத்தில் தொடர்பே இல்லாத சிறுவனும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதிவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியது.