நொடிப்பொழுதில் குற்றவாளியான சிறுவன்: வாசுதேவநல்லூர் இரட்டைக் கொலையில் துயரம்!

கொலை
கொலை

முன்விரோதத்தில் தன் தந்தையைக் கொலை செய்தவரை தன் தந்தையை குத்திய அதே கத்தியால் கண் இமைக்கும் நொடியில் குத்திக் கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டார். உணர்ச்சிமிகுதியில் கண் இமைக்கும் நொடியில் சிறுவன் கொலைக்குற்றவாளியான சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், தேவவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஐயப்பன்(53). இவருக்கும், அடுத்த வீட்டைச் சேர்ந்த பாஜக கூட்டுறவு பிரிவின் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியத் தலைவராக இருந்த செல்லத்துரை(55) என்பவருக்கும் இடையே பணம் தொடர்பான முன்விரோதம் இருந்துவந்தது.

இந்நிலையில் நேற்று இரவு இவர்களுக்குள் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் செல்லத்துரை கத்தியால், ஐயப்பனை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஐயப்பன் உயிர் இழந்தார். அப்போது அங்குவந்த ஐயப்பனின் 17 வயது மகன், தன் தந்தையைக் கொன்ற ஆத்திரத்தில் செல்லத்துரையின் கையில் இருந்த கத்தியைப் பிடுங்கி அவரைக் குத்தினார். இதில் செல்லத்துரையும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வாசுதேவநல்லூர் போலீஸார். 17 வயது சிறுவனைக் கைது செய்து, நெல்லையில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். நொடிப்பொழுதில் உணர்ச்சிவசத்தில் 17 வயது சிறுவன் கொலைக் குற்றவாளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in