இனிப்பான செய்தி: பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு இன்று முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்

இனிப்பான செய்தி: பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு இன்று முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கான ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, கரும்பு வழங்குவதற்கான டோக்கன் இன்று(ஜன.3) முதல் ரேஷன் கடை ஊழியர்களால் வீடு, வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்போருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஆயிரம் ரூபாய் ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதற்காக ரூ.2,430 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 2,19,33,342 பயனாளிகளுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் இணை ஆணையர்களும், அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணிகளைக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கரும்பு கொள்முதலைப் பொறுத்தவரை, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அரசு நிர்ணயித்த விலையில் கரும்பு கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட உள்ள பொருட்களுக்கான கொள்முதல் பணிகளை சில தினங்களுக்கு முன் கூட்டுறவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பொங்கலுக்கான பரிசுத் தொகுப்பை வாங்க ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் கூடுவதைத் தடுக்க ஜன. 3-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்படும் என்றும், ஜன. 9-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததும், டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரம் வாரியாகப் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தினமும் 200 முதல் 250 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது. ரேஷன் கடை பணியாளர்கள், இதற்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள டோக்கன்களை வீடு வீடாகச் சென்று வழங்க உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in