
எழுத்துப்பிழையுடன் ஆங்கில வார்த்தையைச் சொன்ன 5 வயது சிறுமியின் கையை அடித்து உடைத்த டியூசன் ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் பிரயாக் விஸ்வகர்மா(22). இவர் இங்குள்ள ஹபீப்கஞ்ச் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இவரிடம் படிக்கும் 5 வயது சிறுமி கிளி என்பதற்கான ஆங்கில வார்த்தையைச் சொல்லச் சொல்லியுள்ளார். ஆனால், அந்த சிறுமி அந்த வார்த்தையை சரியாக உச்சரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டியூசன் ஆசிரியர் பிரயாக், அந்த சிறுமியின் கையை முறுக்கி கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் கதறித் துடித்த அந்த சிறுமியை மேலும் அவர் அடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டியூசனில் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார் இதனால். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்த போது, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரயாக்கை கைது செய்தனர். இந்த சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.