
சட்ட விரோதமாக மணல் அள்ளுவது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தவரை மணல் அள்ளிய பஞ்சாயத்து தலைவர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை ஊராட்சி தலைவராக அப்பகுதியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் குத்துக்கல்வலசை ஊரில் உள்ள குளத்தில் பஞ்சாயத்து தலைவர் தனது வண்டிகளை வைத்து சட்ட விரோதமாக மணல்களை வாகனத்தில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர் காவல்துறைக்கு புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கிருந்த வாகனங்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் காவல்துறைக்கு புகார் தெரிவித்தவரை தெரிந்து கொண்ட பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ், அவரை தொலைபேசியில் அழைத்து நேரில் வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து புகார் அளித்தவர் அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ், புகார் அளித்தவரை மிரட்டும் வகையில், "உன் வேலையை மட்டும் நீ பார்த்துக்கொள். என் விஷயத்தில் தலையிடாதே. நீ என்னை வீடியோ எடுத்து எங்கு வேண்டுமானாலும் கொடுத்துக் கொள். நீ என்ன குத்துக்கல்வலசையை மாற்றி விடுவாயா?. என் வழியில் இனி குறுக்கே வராதே" என்று பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.