எங்களை இந்தியா மீட்க வேண்டும்- பாக். காஷ்மீரிலிருந்து டோக்ரா மக்கள் கோரிக்கை!

டோக்ரா மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் கோரிக்கை
டோக்ரா மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் கோரிக்கை

பாகிஸ்தானுக்கு எதிராகவும் இந்தியாவின் அரவணைப்பைக் கோரியும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பிராந்தியத்திலிருந்து மற்றுமொரு அபயக் குரல் எழுந்திருக்கிறது.

பொருளாதார மந்தநிலையின் மோசமான உந்துதலில் ஒட்டுமொத்த பாகிஸ்தான் தேசமே திவால் நிலைக்கு சென்றிருக்கிறது. சொந்த குடிமக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாது, அவர்களின் அதிருப்திக்கும் ஆளாகி வருகிறது. இவற்றின் மத்தியில் இந்தியாவின் இறையாண்மைக்கு உரிய பிராந்தியத்தை ஆக்கிரமித்து அந்நாடு உருவாக்கி இருக்கும், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ பிராந்தியத்தின் குடிமக்கள் பாராமுகத்தில் தவித்து வருகிறார்கள்.

இதனால் அதிருப்தியின் உச்சத்தில் இருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குடிமக்கள், தங்களை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று அண்மைக் காலமாக கோரி வருகிறார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கைக்கு மத்தியில், புதிய அபயக் குரல் ஒன்று டோக்ரா மக்கள் வசமிருந்து எழுந்திருக்கிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

டோக்ரா சதர் சபா என்ற அமைப்பின் சார்பில் அதன் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் சஜ்ஜத் ராஜா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பாகிஸ்தான் அரசின் நிர்வாக கேடுகளால் உணவுப்பொருட்களுக்கு அதிக விலை தர வேண்டியிருப்பதுடன், தவறான வரிகள் காரணமாக தங்கள் பொருளாதாரம் மேலும் நொடித்திருப்பதாக அந்த கோரிக்கையில் டோக்ரா மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், டோக்ரா மக்கள் துன்பகரமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும், அடிப்படைத் தேவைகளுக்காக சாலையில் எழுந்து போராட வேண்டியிருப்பதாகவும் அந்த கோரிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 76 ஆண்டுகளாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அவதிப்பட்டு வரும் தங்களை இந்தியா மீட்க முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு விவகாரம் சர்வதேச கவனம் பெற்றுள்ள சூழலில், டோக்ரா மக்களின் அபயக் குரல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in