
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் காருக்குள் சிறை வைக்கப்பட்ட நாயை கண்ணாடியை உடைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீட்டனர். அத்துடன் நாயை காருக்குள் சிறை வைத்தவரையும் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு நகரின் புறநகரில் உள்ள தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் (கேஐஏ) உள்ளது. இங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு கருப்பு நிற கார் நின்று கொண்டிருந்தது. இதனால் அந்த காருக்குள் வெடிபொருட்கள் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அவற்றை அகற்றும் படை.க்கு (பிடிடிஎஸ்) தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் வந்து காரை சோதனையிட முயன்ற போது, காருக்குள் ஒருநாய் சிறை வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். காற்று இல்லாமல் மூச்சுத்திணறிக் கொண்டிருந்த நாயை, கார் கண்ணாடியை உடைத்து அவர்கள் மீட்டனர். அத்துடன் பாதுகாப்பு படை வீரர்கள், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, விக்ரம் ராம்தாஸ் லிங்கேஷ்வர்(30) என்பவர் விமான நிலையத்தின் கேட் 5 பி வழியாக அந்த கருப்பு நிற காருடன் நுழைவது தெரிந்தது.
இதையடுத்து பெங்களூரு கஸ்தூரி நகரில் உள்ள பாப்பையா லே அவுட்டைச் சேர்ந்த லிங்கேஷ்வரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் ஒத்துழைக்க மறுத்ததுடன், விமான பயணம் குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க தவறினார். அதனால் அவர் மீது பிரிவு விலங்குகள் வதை தடுப்பு சட்டப்பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். இதன் பின் காவல் நிலைய ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார் என்று கேஐஏ காவல் துறையினர் இன்று தெரிவித்தனர்.