
அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த நாய் ஒரு மாத ஆண் குழந்தையைத் தூக்கிச்சென்று கடித்துக் கொன்ற சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிரோஹி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு பாதிக்கப்பட்ட தனது கணவரின் சிகிச்சைக்காக தாய் தனது ஒரு மாத ஆண்குழந்தையோடு வந்திருந்தார்.
இந்த நிலையில், மருத்துவமனை வார்டு உள்ளே கணவரின் படுக்கைக்குக் கீழ் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த ஒரு மாத ஆண் குழந்தையை தெருநாய் நேற்று தூக்கிச் சென்றது. இதன் பின் எழுந்து பார்த்த தாய், தனது குழந்தையைக் காணவில்லை என மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறினார்.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை மருத்துவமனை ஊழியர்கள் சோதனை செய்த போது அதிர்ச்சியடைந்தனர். காசநோய் பிரிவுக்குள் இரண்டு தெருநாய்கள் உள்ளே நுழைகின்றன. இதன் பின் சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு நாய் குழந்தையைக் கவ்விக் கொண்டு செல்வதும் தெரிந்தது.
இச்சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து குழந்தையைத் தேடினர். அப்போது மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் கடித்து குதறிய நிலையில் குழந்தை இறந்து கிடந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிரோஹி மாவட்ட கலெக்டர், உரிய விசாரணையை நடத்தி இன்று அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவமனைக்குள் புகுந்து கைக்குழந்தையை நாய் தூக்கிச்சென்று கடித்துக் கொன்ற விவகாரம், ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.