காங்கிரஸ் தலைவர் தேர்தல்: ரேஸில் இடம்பெறுகிறாரா சசி தரூர்?

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: ரேஸில் இடம்பெறுகிறாரா சசி தரூர்?

காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17-ல் நடக்கும் என கட்சியின் செயற்குழு அறிவித்துவிட்ட நிலையில், அந்த ரேஸில் இடம்பெறப்போவது யார் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி சசி தரூர் கட்சித் தலைவராக வர விரும்புவதாக ஊகங்கள் எழுந்திருக்கின்றன.

ஒவ்வொருவராக விலகும் ஜி-23 தலைவர்கள்

2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துவிட்ட பின்னர், இடைக்காலத் தலைவராக சோனியா நீடிக்கிறார். அக்கட்சி தொடர்ந்து சந்தித்துவரும் தோல்விகளால், கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேவை எனும் குரல் ஒலிக்கத் தொடங்கியது. இதுதொடர்பாக சோனியா காந்திக்கு ஜி-23 தலைவர்கள் பகிரங்கக் கடிதம் எழுதிய பின்னரும் இவ்விஷயத்தில் முடிவெடுக்கத் தாமதமானதால், நிலைமை மோசமானது.

ஜி23 தலைவர்களில் முக்கியமானவரான குலாம் நபி ஆசாத் சமீபத்தில் காங்கிரஸிலிருந்து விலகினார். ராகுல் காந்தி மீது கடும் குற்றச்சாட்டுகளுடன் சோனியாவுக்கு அவர் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே, இந்தக் குழுவைச் சேர்ந்த கபில் சிபல், ஜிதின் பிரசாதா போன்ற தலைவர்கள் காங்கிரஸிலிருந்து விலகிவிட்டனர். கபில் சிபல் சமாஜ்வாதி ஆதரவுடன் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஜிதின் பிரசாதா பாஜகவில் சேர்ந்து உத்தர பிரதேசத்தில் அமைச்சர் பதவிவகிக்கிறார்.

ரேஸில் இடம்பெறுவது யார்?

இந்தச் சூழலில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. ராகுல் காந்திதான் மீண்டும் தலைவராக வேண்டும் என்றும், வெளிநாட்டில் இருக்கும் அவர் இந்தியா திரும்பியதும் அது குறித்து வலியுறுத்தப்படும் என்றும் சல்மான் குர்ஷித், அசோக் கெலாட் போன்ற தலைவர்கள் கூறிவருகிறார்கள்.

ஆனால், தலைவர் பதவியை ஏற்க முடியாது என ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கிறார். தலைவர் பதவிக்கு அசோக் கெலாட்டை முன்னிறுத்த சோனியா காந்தி குடும்பம் விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஆனால், ‘காங்கிரஸ் கட்சி மீண்டும் ராகுலையே தலைவராக்க முயற்சிக்கிறது; முட்டாள்கள் தினத்தை அக்டோபரில் அக்கட்சி கொண்டாடுகிறது’ என பாஜக கடுமையாக விமர்சித்துவருகிறது.

மலையாள நாளிதழ் கட்டுரை

இந்தச் சூழலில், நேற்று மலையாள நாளிதழான ‘மாத்ருபூமி’யில் எழுதியிருக்கும் கட்டுரையில், இதுகுறித்த தனது கருத்துகளைப் பதிவுசெய்திருக்கிறார் சசி தரூர். காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடப்பதன் மூலம் கட்சிக்கு ஆதரவு பெருகும் என அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

‘பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவருக்கான போட்டி கடுமையாகிக்கொண்டே போகிறது; அதன் மூலம் அக்கட்சி உலகளாவிய கவனம் பெற்றுவருகிறது’ என்று குறிப்பிட்டிருக்கும் சசி தரூர், அதேபோல், காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் என்றும், மேலும் அதிக வாக்காளர்களைத் திரட்டித் தரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ‘இதன் காரணமாக மேலும் பல வேட்பாளர்கள் போட்டியிட முன்வருவார்கள். கட்சி தொடர்பான தங்கள் பார்வையை முன்வைப்பார்கள். அதன் மூலம் தேசிய அளவில் கவனம் குவியும்’ என்று அவர் அக்கட்டுரையில் எழுதியிருக்கிறார். அவர்களில் ஒருவராக தன்னையும் அவர் கருதிக்கொள்கிறார் என்றே அவரது கட்டுரையின் சாராம்சம் உணர்த்துகிறது.

தான் போட்டியிட்டால் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறதா என காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசித்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோனியா குடும்பத்திலிருந்து ஒருவர் அல்லது சோனியா குடும்பம் முன்னிறுத்தும் ஒருவருக்கே வெற்றிவாய்ப்பு அதிகம். எனவே, சசி தரூரின் முயற்சி எந்த அளவுக்குப் பலனளிக்கும் என விரைவில் தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in