`மத ரீதியான பாகுபாடு'; கொந்தளித்த நடிகை சனம் ஷெட்டி: கோவை விமான நிலைய இயக்குநர் விளக்கம்

`மத ரீதியான பாகுபாடு'; கொந்தளித்த நடிகை சனம் ஷெட்டி: கோவை விமான நிலைய இயக்குநர் விளக்கம்

கோவை விமான நிலையத்தில் மத ரீதியான பாகுபாடு காட்டப்பட்டதாக நடிகை சனம் ஷெட்டி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு அண்மையில் பேசியிருந்தார். யாரிடமும் பாகுபாடு காட்டவில்லை, நடிகை சனம் ஷெட்டியின் புகார் வருந்ததக்கது என கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில் வெளியான 'அம்புலி' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தார். நடிகை சனம் ஷெட்டி அண்மையில் கோவையில் இருந்து சென்னைக்கு செல்வதற்கு கோவை விமான நிலையம் வந்திருந்தார். இந்நிலையில் விமான நிலையத்தில் மத ரீதியாக ஊழியர்கள் பாகுபாடு காட்டுவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தேன். வருத்தமான ஒரு நிகழ்வு நடந்தது. அதனை கண்டிப்பாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் விமானம் ஏறுவதற்கு முன்பு என்னையும் இரண்டு முஸ்லிம் நபர்களையும் தனியாக அழைத்து சோதனை நடத்தினார்கள். என்னை என் பெயர் காரணத்தினாலும், அவர்கள் முஸ்லிம் ஆடைகள் அணிந்தவாறு இருந்ததாலும் இது போன்று நடந்து கொண்டனர். மொத்தம் 190 பயணிகள் இருக்கும் போது எங்களை மட்டும் தனியாக சோதித்தது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஏன் எங்களை மட்டும் தனியாக அழைத்து சோதிக்கிறீர்கள் என கேட்டேன். வழக்கமான சோதனை தான் என்று பதில் சொன்னார்கள். இதை பார்க்கும் போது என்னுடைய கேள்வி என்னவென்றால், அந்த 190 பயணிகளும் எந்த பேக்கும் எடுத்துப் போகவில்லையா, அவர்கள் எதுவும் எடுத்து வர வாய்ப்பில்லையா, சோதனை செய்தால் அனைத்து பயணிகளின் பேக்குகளை சோதிக்க வேண்டும். எங்களை மட்டும் இப்படி மத ரீதியாக பாகுபாடு காட்டி சோதனை செய்வது எங்களை புண்படுத்துகிறது. முதலில் மத ரீதியான பாகுபாடுகளை நிறுத்த வேண்டும். இது எவ்வளவு பெரிய கேவலம்" என்று கூறியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் நம்மிடம் கூறுகையில், "கோவை சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் குடியரசு தினம் வருவதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அனைவரது கை பைகளையும் சோதனை செய்ய உத்தரவு போடப்பட்டுள்ளது. நடிகை சனம் ஷெட்டியின் புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் யாரிடமும் பாகுபாடு காட்டவில்லை. நடிகை சனம் ஷெட்டியின் புகார் வருந்ததக்கது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in