இது பள்ளிப் பிள்ளைகளுக்காக!

டெய்லர் தங்கராஜின் ஆவணப் பெட்டகம்
டெய்லர் தங்கராஜ்
டெய்லர் தங்கராஜ்

செய்தித்தாள்கள் என்பது பலருக்கு நடப்புகளைச் சொல்லும் ஊடகம். சிலருக்கு காலை, மாலை நேரத்து டைம் பாஸ். டெய்லர் தங்கராஜுக்கு அறிவைச் சுமக்கும் ஓர் ஆவணப் பெட்டகம்!

தேனி மாவட்டம் பொம்மைய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் படித்தது பத்தாம் வகுப்பு வரைதான் என்றாலும் செய்தித்தாள் மூலம் இவர் படித்த பொது அறிவு ஏராளம். நான்கு வயதிருக்கும் போதே போலியோவால் பாதிக்கப்பட்டவர் தங்கராஜ். அதனால் மாற்றுத்திறனாளியாகிப் போனர் மற்றவர் தயவை எதிர்பார்க்காமல் தனது உழைப்பில் தனக்கானதைத் தேடிக்கொள்கிறார். வருமானத்துக்கு, கற்றுவைத்த தையல் கலை இவருக்குக் கைகொடுக்கிறது. தினமும் தையல் மெஷினுக்கு எதிரே உட்காரும் முன்பாக அன்றைய செய்தித்தாள்களை புரட்டிப் பார்த்து அதில் வந்திருக்கும் அறிவுசார் செய்திகளை கத்தரித்து ஃபைல் போடுவதுதான் தங்கராஜின் இன்னொரு முக்கிய வேலை. இப்படி ஃபைல் போட்டுவைக்கும் செய்திகளை என்ன செய்கிறார் இந்த மனிதர்?

அதுபற்றி அவரிடமே கேட்போம். “ஓவியராகணும்கிறதுதான் என்னோட ஆசை. ஆனால், அது நடக்கல. சின்ன வயசுலயே இளம்பிள்ளை வாத நோய்க்கு ஆளாகிட்டேன். செய்தித்தாள்கள்ல வர்ற அறிவுபூர்வமான செய்திகளை கட் பண்ணி வைக்கிற பழக்கம் 15 வருஷத்துக்கு முந்தியே என்னைத் தொத்திக்கிச்சு. தினம் ஒரு தகவல் மாதிரியான முக்கிய செய்திகளைப் படித்து கட் பண்ணி வைக்கிறதுக்காகவே ஒண்ணுக்கு நாலு பேப்பர்கள வாங்க ஆரம்பிச்சேன்” என்று சொல்லும்போதே தங்கராஜின் கண்களில் அத்தனை பிரகாசம் தெரிகிறது.

தங்கராஜ் சேகரித்த  செய்தித் துணுக்குகள்...
தங்கராஜ் சேகரித்த செய்தித் துணுக்குகள்...

“இப்படிச் சேகரிச்சு வைக்கிற செய்தித் துணுக்குகளை என்ன செய்வீங்க?” என்று கேட்டால், “இதுவரை நான் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்தித் துணுக்குகளை கட் பண்ணி சேகரிச்சுருப்பேன். அதையெல்லாம் தனித் தனியா வெள்ளைத் தாளில் ஒட்டி முறையா ஃபைல் பண்ணவும் மறக்கமாட்டேன். ஓரளவுக்கு செய்தித் துணுக்குகள் சேர்ந்ததும், அதை அப்படியே ஜெராக்ஸ் போட்டு எங்காவது ஒரு பள்ளிக்கூடத்துல குடுத்துருவேன். ஒரு காப்பி எடுக்குறதுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவு பிடிக்கும். ஆனாலும் என்னோட சொந்தக் காசுல காப்பி எடுத்து இதுவரைக்கும் 63 பள்ளிக்கூடங்களுக்குக் குடுத்துருக்கேன். பொதுவா, ஸ்கூல் பசங்க அவ்வளவா பேப்பர் படிச்சுடமாட்டாங்க. மொத்த பேப்பரையும் அவங்கள படிடான்னு சொல்றதுக்குப் பதிலா என்ன தேவையோ எது அறிவு சார்ந்ததோ அதை மட்டும் கட் பண்ணிக் குடுத்தா அதை அவங்க நிச்சயம் படிப்பாங்க. ஆசிரியர்களும் அதைப் படிக்கவைப்பாங்க. அந்த எண்ணத்துல தான் இதைச் செய்ய ஆரம்பிச்சேன்” என்கிறார் தங்கராஜ்.

“ஏதாச்சும் ஒரு காரணம் இல்லாம இப்படிச் செய்யமாட்டீங்க. சொல்லுங்க... நீங்க இப்படிச் செய்யுறதுக்கு என்ன காரணம்?” என்று கேட்டதற்கு, “பெருசா ஒரு காரணமும் இல்லைங்க... என்னோட அப்பா, அம்மா ரெண்டு பேருமே நல்ல வாசிப்பு பழக்கம் உள்ளவங்க. அப்பா இறக்கும் தகுவாயிலும்கூட வாசிக்கிறத விடாமல் இருந்தாரு. அவங்களுக்குள்ள இருந்த அந்த வாசிப்பு தாகம் தான் எனக்குள்ளயும். அவங்க பேரக் காப்பத்துற வகையில நானும் நல்லா வாசிக்க ஆரம்பிச்சேன். நம்ம வாசிச்சுத் தெரிஞ்சுக்கிட்ட செய்திகள் நம்மளோட போயிடக்கூடாது. அதை நாலு பேருக்குச் சொல்லி பிரயோஜனமா இருக்கணும்னு நினைச்சேன். அதுல வந்தது தான் இந்தப் பழக்கம்.

ஆனா, நான் இப்படியெல்லாம் நினைச்சாலும் எனக்குள்ள ஒரு சின்ன வருத்தம் இருக்கு. என்னோட பிள்ளைங்க என் அளவுக்கு வாசிக்க மாட்டேங்கிறாங்க. இருந்தாலும் என் பையன் மேல ஒரு நம்பிக்கை இருக்கு. அவன் தமிழ் படிக்கிறான். அதனால, புத்தகம் வாசிப்பான்னு நம்புறேன். இவங்களுக்காகவும் தான் இந்த செய்தி சேகரிப்பை செஞ்சுட்டு இருக்கேன்” என்ற தங்கராஜ் தொடர்ந்தும் பேசுகையில், “பள்ளிக்கூட பிள்ளைங்களுக்கு மட்டுமில்லாம போட்டித் தேர்வுகள் எழுதப் போறவங்களுக்கும் என்னோட பேப்பர் துணுக்கு ஃபைல் பயன்படுது.

என்னோட நண்பர் ஒருத்தர் என்னோட பேப்பர் ஃபைலை படிச்சுட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதப் போனார். எழுதிமுடிச்சுட்டு வந்தவரு, ‘அண்ணே நீங்க குடுத்த அந்த பேப்பர் கட்டிங்ல இருந்து 4 கேள்வி வந்துச்சு’ன்னு சொன்னார். அதைக் கேட்டப்ப எனக்குள்ள அத்தன சந்தோசம். இந்த மாதிரியான நிகழ்வுகள் தான் என்னைய மேலும் மேலும் உற்சாகப்படுத்திட்டே இருக்குன்னு சொல்லணும்.

தங்கராஜ்
தங்கராஜ்

கரோனா காலம் எல்லாருக்கும் போலவே எனக்கும் கஷ்டமான காலம் தான். அதுக்காக அதையே சொல்லிக்கிட்டு முடங்கிப் போயிடல. எங்க ஊர்ல, முதுகுத்தண்டு வடம் பாதிச்சவங்களுக்கு உதவுறதுக்காக ஒரு அறக்கட்டளை இருக்கு. அதுக்கு, என்னால முடிஞ்ச உதவிய செஞ்சுட்டு இருந்தேன். அந்த சமயத்துல ஊரடங்கு இருந்ததால ஒழுங்கா பேப்பர்களும் வரல. அதனால என்னோட பேப்பர் கட்டிங் பணியைத் தொடர முடியல. இப்போ, பள்ளிக்கூடம் திறந்திருக்கிற நேரம். அதனால யூனிஃபார்ம் தைக்கிற சீசன். இத முடிச்சிட்டு அடுத்த மாசத்துல இருந்து மறுபடி பேப்பர் கட்டிங் பணிகளை துவங்கலாம்னு இருக்கேன்.

2020-ல் தேனியில இருக்கிற அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் என்னோட பேப்பர் கட்டிங் ஃபைல்களை குடுத்துடணும்னு பிளான் பண்ணி வெச்சிருந்தேன். கரோனா ஊரடங்கால அது கெட்டுப் போச்சு. அதனால, 2024-ம் வருஷத்துக்குள்ள அதை செஞ்சு முடிச்சிடணும். இப்போதைக்கு எனக்குள்ள இருக்கிற ஒரே பிளான் அதுதான்” என்றார்.

செய்தித்தாள் படிப்பதையே நம்மில் பலர் மறந்துவிட்ட நிலையில், தான் படித்த செய்தி மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்க வேண்டும் என்று நினைத்து அதற்காக தன் கைக்காசையும் செலவழிக்கும் எளியவர் தங்கராஜ் உண்மையிலேயே தங்கமான ராஜ் தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in