காரைக்கால் மாணவர் மரணம்; டாக்டர்கள் சஸ்பெண்ட்; போராட்டத்தில் குதித்த மருத்துவப் பணியாளர்கள்

காரைக்கால் மாணவர் மரணம்; டாக்டர்கள் சஸ்பெண்ட்; போராட்டத்தில் குதித்த மருத்துவப் பணியாளர்கள்

காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காரைக்காலில் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பால மணிகண்டன் கூடப் படிக்கும் மாணவி ஒருவரின் தாயார் கொடுத்த விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்ததால் உடல் நலம் குறைபாடு ஏற்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதால் அந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று சொல்லப்படுகிறது.

மருத்துவமனையின் அலட்சிய போக்காலேயே மாணவன் உயிரிழந்ததாக பெற்றோர் உள்ளிட்டவர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பேரில் சிறுவனின் இறப்பு குறித்து விசாரிக்க குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் விசாரணை நடத்தி தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையில், காரைக்கால் மாணவனுக்கு விஷம் கொடுக்கப்பட்டது தெரியாததால் வாந்தி மற்றும் வயிற்று வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் பேரில் முதல்வர் ரங்கசாமி, மாணவனுக்கு உரிய சிகிச்சை அளிக்கத் தவறிய காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் விஜயகுமார் மற்றும் பாலாஜி ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று காலை பணிக்கு வந்த மறுத்து, செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் சுமார் ஒரு மணி நேரம் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் ஏராளமான உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை பெற வழி இன்றி தவித்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து தங்கள் பணியை தொடர்ந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in