‘திமுக அரசின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது; முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்’ - ஆர்.பி.உதயகுமார் அதிரடி!

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.‘திமுக அரசின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது’ - ஆர்.பி.உதயகுமார் அதிரடி!

கடந்த 2 ஆண்டு கால திமுக ஆட்சியில் மதுரை மாவட்டம் எல்லா வகையிலும் பின் தங்கிவிட்டது. கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 4 வது இடத்தில் இருந்தது. அது இந்தாண்டு 18 வது இடத்திற்கு சென்று விட்டது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில், புதிய உறுப்பினர் சேர்க்கை நகர செயலாளர் ஜெ.டி.விஜயன் தலைமையில் நடைபெற்றது. இதனை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பேரையூர் அருகே பொன்னையாபுரத்தில் தற்கொலை செய்து கொண்ட காளீஸ்வரி என்ற பத்தாம் வகுப்பு மாணவியின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது..., “மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பொன்னையாபுரத்தில் காளிஸ்வரி என்ற 10-ம் வகுப்பு மாணவி மதிப்பெண் குறைவாக பெற்றதற்காக தற்கொலை செய்து கொண்டார். இது மிகவும் வேதனைக்குரியதாகும். அந்த மாணவியின் குடும்பத்திற்கு கழக பொதுச்செயளாலர் எடப்பாடியார் சார்பில் ஆறுதல் தெரிவித்தோம்.

கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 95 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் 4 வது இடத்தை மதுரை மாவட்டம் பிடித்தது. தற்போது இந்த ஆண்டு 91 சதவீதம் தேர்ச்சி பெற்று 18 வது  இடத்திற்கு பின்னோக்கி சென்றுவிட்டது. மதுரை மாவட்டத்தின் மீது ஆட்சியாளர்கள் அக்கறை செலுத்தவில்லை. இது மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் நிதி கொடுக்கும் நிலையில், சித்திரை திருவிழாவில் சாமி கும்பிடச் சென்று பலியானவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் கூட வழங்க முதலமைச்சருக்கு கருணை இல்லை” என்றார்

மேலும், “கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் இந்திய அளவில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் முதன்மை இடத்தை பிடித்து விருது பெற்று, 25 லட்ச ரூபாய் சிறப்பு நிதியாக பெற்றது. ஆனால் இன்றைக்கு திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு பொது நிவாரண நிதியில் இருந்து நிதியை தர அரசு மறுத்து வருகிறது. அது மட்டுமல்ல கள்ளிக்குடி, கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நிதி தராமல், எதிர்க்கட்சி தொகுதி என்று வஞ்சித்து வருகிறது. திருமங்கலம் தொகுதி மக்களின் நலன் கருதி புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த 27.5 2019 அன்று அரசாணை வெளியிடப்பட்டு, இதற்கு 21 கோடியே 72 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் இதற்காக 2.54 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டது.

தற்போது ஆட்சிக்கு வந்த திமுக அதை கிடப்பில் போட்டுள்ளது. சட்டமன்றத்தில் நாங்கள் எடுத்துக் கூறினாலும் ஆகட்டும் பார்க்கலாம் என்று அமைச்சர் கூறுகிறார். ஆனால் அந்த நிதியை வைத்து திருமங்கலம் பேருந்து நிலையத்தை சீரமைப்பு என்ற பெயரில் வணிக வளாகமாக மாற்றும் அவல நிலை உருவாகியுள்ளது. 

அதேபோல் 110 விதியின் கீழ் திருமங்கலத்தின் ரயில்வே மேம்பாலம் அமைக்க அம்மா அரசாணை வெளியிட்டார். அதனை தொடர்ந்து எடப்பாடியார் நிதியினை ஒதுக்கினார். இதற்காக ரயில்வே துறையில் 50 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி நில எடுப்பு பணி நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது அந்த திட்டத்தையும் தாமதப்படுத்தி உள்ளனர். ஆனால் அமைச்சர் வேலு, திமுக மாவட்ட செயலாளர் கோரிக்கை வைத்ததால் திட்டம் வருகிறது என்று கூறுகிறார் .கடந்த 10 ஆண்டுகளில் திமுக மாவட்ட செயலாளர் யாருக்கு கோரிக்கை வைத்தார் என்று ஆதாரத்துடன் வெளியிட தயாரா?. அப்படி வெளியிட்டால் நான் பொதுவாழ்வில்  இருந்து விலகிக் கொள்கிறேன்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ரூ.30 ஆயிரம் கோடியை முதலமைச்சரின் மகன், மருமகன் கொள்ளையடித்தாக அமைச்சர் கூறியுள்ளார் தற்போது அந்த அமைச்சர் துறையை மாற்றி உள்ளனர். அந்த அமைச்சரை நீக்கினால் பல உண்மைகள் வெளிப்பட்டு திமுக ஆட்சி வீட்டுக்கு போய்விடும்.

தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச்சாராயம். ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் ஆகியவற்றின் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடியார் வருகின்ற திங்கட்கிழமை பேரணி நடத்துகிறார். திமுக ஆட்சி தலையின் மீது கத்தி தொங்குகிறது. ஸ்டாலினை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எடப்பாடியார் குரல் எழுப்பி உள்ளார். ஸ்டாலின் ராஜினாமா செய்யும் வரை வீதி, வீதியாக சென்று மக்களிடத்தில் திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்வோம்’’ என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in