தீபாவளி சீட்டு நடத்தியவர் திடீர் தலைமறைவு: சாலை மறியலில் சிக்கிய எஸ்.பி!

தீபாவளி சீட்டு நடத்தியவர் திடீர் தலைமறைவு: சாலை மறியலில் சிக்கிய எஸ்.பி!

தீபாவளி பண்டு நடத்தி பண மோசடி செய்த நபரைக் கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த ஆலந்தூரைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் அப்பகுதியில் ஜே.பி.ஸ்டார் என்னும் ஏஜென்சி நிறுவனம் நடத்திவருகிறார். அந்த ஏஜென்சி நிறுவனம் மூலம் தீபாவளி பண்டு நடத்தி வந்தார். மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தால், 4 கிராம் தங்கமும், 500 செலுத்தினால் 2 கிராம் தங்கமும், அத்துடன் 40 கிராம் வெள்ளி நாணயம், பட்டாசு, வெள்ளிப் பாத்திரங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த கவர்ச்சியான திட்டத்தை நம்பி தாமரைபாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வெள்ளியூர், வெங்கல், செம்பேடு, சேத்துப்பாக்கம், பூவளம்பேடு, குறுவாயில் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பணத்தைக் கட்டி வந்துள்ளனர். இதற்காக அந்தந்த கிராமங்களில் உள்ளவர்களையே ஏஜென்ட்டுகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்தைக் கொண்டு அவர் ஆடம்பர செலவு செய்து வந்துள்ளார்.

தீபாவளி நெருங்கும் வேளையில் அவர் தனது ஏஜென்சி கடையை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் கடந்த வாரம் அவரின் கடை முன்பாக திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று திரண்டு திருவள்ளூர் எஸ்.பி-யிடம் புகார் மனு அளித்தனர். காவல்துறையினர் அவரை தேடிவந்தாலும், ஆனால் இதுவரை அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் தாமரைப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் எஸ்.பியின் வாகனமும் சிக்கியது. இதையடுத்து காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கலைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in