வட இந்தியாவில் இன்றே தொடங்கியது தீபாவளி கோலாகலம்

வட இந்தியாவில் இன்றே தொடங்கியது தீபாவளி கோலாகலம்

வட மாநிலங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

வடமாநிலங்களில் இன்று முதல் தீபாவளி பண்டிகை ஐந்து நாட்களுக்கு  கொண்டாடப்படுகிறது. இதற்காக பஞ்சாங்கம் பார்த்து பண்டிதர்கள் அறிவிப்பை வெளியிடுகிறார்கள், இந்த பஞ்சாங்கத்தின்படி, முதல் நாளான இன்று (அக்.22), மாலை முதல்தந்தேரஸ் எனும் உலோகத்திருநாள் எனத் துவங்குறது. இந்நாளில் பொதுமக்கள் அனைவரும் அக்கம், பக்கக் கடைகளுக்கு சென்று ஏதாவது ஒரு உலோகப்பொருள் வாங்குவார்கள். தம் வசதிக்கு ஏற்றபடி தங்க நகை முதல் வெள்ளி வரை ஏதாவது ஒரு பொருளை வீட்டிற்காக வாங்குகிறார்கள். இதை மாலை வீட்டில் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த தந்தேரஸ் மாலையில் துவங்கியிருப்பதால் இது நாளை மதியம் வரை நீடிக்கும்.

ராமர் பெயரில் விழா  

ஞாயிறு மாலை முதல் திங்கள் வரை ’சோட்டி தீபாவளி ’(சின்ன தீபாவளி) எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், செல்வம் தரும் கடவுளாகக் இந்துக்களால் கருதும் லஷ்மி தங்கள் வீட்டிற்குள் நுழைவார் என்பது நம்பிக்கை உள்ளது. எனவே, லஷ்மியை தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வரவேற்கிறார்கள். இதன் காரணமாக, வட மாநிலங்களின் கிராமம் முதல் நகரங்கள் வரை வீடுகளும், கட்டிடங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.

வடஇந்தியாவின் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தராகண்ட், இமாச்சலப்பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த நாளை ராமர் பெயரில் கொண்டாடுகின்றனர். ராவணனிடம் போரிட்டு வென்ற ராமர் அயோத்திக்குத் திரும்பி முடிசூட்டிய நாளாகவும் இது கருதப்படுகிறது. இதற்காக, ராமருக்கும் பூஜை செய்து வணங்கப்படுகிறது.

பிரதமர் பங்கேற்கிறார்

இதனால், உ.பியின் அயோத்தியில் பல லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படுகிறது. இது, கடந்த 2017-ல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் ஒவ்வொரு வருடமும் அயோத்தியில் தீபாவளி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், இந்த வருடம் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்கிறார். நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை பெரிய தீபாவளி எனும் முக்கிய நாள் கொண்டாடப்படும்.

தொடர்ந்து ஐந்து நாள் கொண்டாடப்படும் தீபாவளி பருவத்தின் முக்கியத் திருநாளாகும். இதில், பொதுமக்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி பூஜை செய்து, பட்டாசுகளையும் வெடிக்கிறார்கள். இந்தநாளில், தம் உறவுகள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு ஒருவொருக்கு ஒருவர் நேரில் சென்று வாழ்த்து கூறி மகிழ்கிறார்கள். அப்போது அனைவரது கைகளிலும் தவறாமல் இனிப்புகள் இருக்கும்.

ஐந்தாவது தினமான புதன்கிழமை இந்தமுறை ‘கோவர்தன் பூஜை’ மற்றும் ‘பைய்யா  தோஜ்’ஆகிய இரண்டும் ஒரே நாளில் அனுசரிக்கப்படும். இதில், தங்கள் வீடுகளில் உள்ள அல்லது அக்கம், பக்கம் இருக்கும் பசு மற்றும் காளை மாடுகளை குளிப்பாட்டி பூஜை செய்கிறார்கள். வியாபாரக்கடைகள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பூஜையிட்டு புதிதாக கணக்குகளை துவக்குகின்றனர். கடைசி பண்டிகையான பைய்யா தோஜ், பெண்களுக்கான முக்கியத் திருவிழா.. ரக்‌ஷா பந்தன் நாளில் சகோதர்கள் தம் சகோதரிகளைத் தேடி வந்து ராக்கி கயிறு கட்டி மகிழ்கிறார்கள்.

மூன்று நாள் அரசு விடுமுறை
அதுபோல், பைய்யா தோஜில் பெண்கள் தம் சகோதரர்களைத் தேடிச் செல்கிறார்கள். மணமான பெண்கள் கூட தம் குடும்பப் பொறுப்பை தம் கணவன்களிடம் கவலைப்படாமல் ஒப்படைத்துக் கிளம்பி விடுகிறார்கள். பைய்யா தோஜ் அன்றி, சாலைகளில் ஓடும் வாகனங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுவதைப் பார்க்க முடியும். இடம் கிடைக்காமல் பேருந்துகளின் மேற்புறங்களிலும் பெண்கள், ஆண்களுக்கு இணையாக ஏறி அமர்ந்து செல்லத் தயங்குவதில்லை. பேருந்து மற்றும் ரயில்களின் வாசல்களிலும் இளைஞர்களை போல் பெண்கள் கூட்டம் அலைமோதுவது உண்டு. தீபாவளிக்காக, வட மாநிலங்களின் பெரும்பாலான மாநில அரசுகள் தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறையாக விட்டு விடுகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in