அரசு விரைவுப் பேருந்துகளில் தீபாவளி முன்பதிவு நாளை தொடக்கம்

அரசு விரைவுப் பேருந்துகளில் தீபாவளி முன்பதிவு நாளை தொடக்கம்

அரசுப் பேருந்துகளில் தீபாவளி முன்பதிவு நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. தலைநகர் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளது.

தீபாவளிப் பண்டிகை அடுத்த மாதம் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு தலைநகர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் செல்வது வழக்கம். தீபாவளியை முன்னிட்டு ஏராளமான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளியை ஒட்டியே சனி, ஞாயிற்றுக் கிழமையும் வருவதால் இம்முறை 21-ம் தேதியே பலரும் சொந்த ஊருக்குச் செல்லத் திட்டமிடுவார்கள்.

ஏற்கெனவே சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. தீபாவளிக்கு ஒருமாதத்திற்கு மேல் இருக்கும் நிலையில் ரயில்களில் இப்போதே காத்திருப்போர் பட்டியலுக்கும் சென்றுவிட்டது. இந்த நிலையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், தீபாவளி பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நாளை முதல் தொடங்குகிறது.

www.tnstc.com என்ற இணையதத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதேபோல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கவுண்டர்களிலும் முன்பதிவு செய்யலாம். தீபாவளிக்கு இருநாள்களுக்கு முன்பு கோயம்பேட்டிலும் சிறப்புக் கவுன்டர்கள் அமைக்கப்பட உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in