டாஸ்மாக் ஊழியர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் சுற்றறிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

டாஸ்மாக் ஊழியர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் சுற்றறிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

மாவட்ட மேலாளரிடமிருந்து முறையான அனுமதி கடிதம் பெற்ற பிறகுதான், சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளை ஊழியர்கள் சந்திக்க வேண்டுமென்ற சுற்றறிக்கையை எதிர்த்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச் சங்க மாநில செயலாளர் மோகன்ராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், டாஸ்மாக் நிறுவனத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த  நிலையில், அவர்களுக்குப் போதுமான ஊதியம் மற்றும் அடிப்படை உரிமைகள் வழங்கப்படுவதில்லை என்பதால் சென்னையில் உள்ள தலைமை அலுவலத்தில் உள்ள நிர்வாகிகளைச் சந்தித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நவம்பர் 29-ம் தேதி டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையில்,  எந்தவொரு ஊழியரும், தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரியை சந்திக்க வேண்டுமென்றால், சம்பத்தப்பட்ட மாவட்ட மேலாளரிடமிருந்து முறையான அனுமதி கடிதம் பெறவேண்டும் என்றும், இதுதொடர்பான அறிவிப்பை  ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்களிடம்  தெரிவிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஊழியர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ள இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய  வேண்டுமென  மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு  நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in