55 கி.மீ வேகத்திற்கு காற்று வீசக் கூடும்: 5 மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

55 கி.மீ  வேகத்திற்கு காற்று வீசக் கூடும்: 5 மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதன் விளைவாக விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கை  ஆகியவற்றின் காரணமாக கடலோர மாவட்டங்களில்   மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்  செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகி உள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால்  கடல் பகுதியில் 55 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசக் கூடும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் தங்கள் மாவட்ட மீனவர்களைக்  கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளனர். 'கனமழைக்கு வாய்ப்புள்ளதாலும், காற்று வீசவும் வாய்ப்பு இருப்பதாலும் நாகப்பட்டினம் மாவட்டம் மீனவர்கள் மறு  அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்,  மீன் பிடிக்க சென்றிருப்பவர்கள் உடனடியாக கரை திரும்பி விட வேண்டும்' என்று நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.

இதே போல மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கைக்கான  ஆரஞ்சு அலர்ட்  விடுக்கப்பட்டு இருப்பதால் இன்று முதல் மீனவர்கள் யாரும்  அவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் மாவட்ட ஆட்சியர் லலிதா கேட்டுக் கொண்டுள்ளார். இதே போல நெல்லை மாவட்டத்தில் கனமழை மற்றும் புயல்  எச்சரிக்கை காரணமாக நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல்  கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகள்  மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். ராமநாதபுரத்திலும் இதே போல மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in