தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளியின் தலையில் கல்லைப்போட்டு கொலை: போதையில் நண்பர் வெறிச்செயல்

கொலை
கொலை

தொழிலாளர்களுக்குள் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சக தொழிலாளியே, தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக்கொன்ற சம்பவம் தென்காசியில் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தென்காசியைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவர் அந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாங்காய் தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்து, மாங்காய் பறித்து விற்றுவருகிறார். இந்தப் பணிகளுக்காக அவர் வீரவநல்லூர் வந்திருந்தார். அங்குள்ள புதூர் ரெட்டியார்புரம் பகுதியில் ஒரு தோட்டத்தில் மாங்காய் பறிப்பதற்காக வல்லம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி(50), ஞான முத்து(50) ஆகிய இருவரையும் வேலைக்கு அழைத்துச் சென்றார். நேற்று இரவாகியும் வேலை முடியாததால் கருப்பசாமியும், ஞானமுத்துவும் வேலை செய்த அந்தத் தோட்டத்திலேயே தங்கினர். அப்போது அவர்கள் ஒன்றாக சேர்ந்து மதுவும் அருந்தினர். இதில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் தனித்தனியே சென்று படுத்துக்கொண்டனர்.

நள்ளிரவில் ஞானமுத்துவுக்கு தூக்கம் களைந்து திடீரென முழிப்பு வந்தது. அப்போது அவருக்கு கருப்பசாமியோடு தகராறு செய்தது நினைவிற்கு வந்தது. உடனடியாக தூங்கிக் கொண்டிருந்த கருப்பசாமி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தார். அத்துடன் மாங்காய் சாக்கில் கருப்பசாமியின் உடலைக்கட்டி தோட்டத்தில் ஒரு மூளையில் வைத்துவிட்டு ஞானமுத்து தலைமறைவாகிவிட்டார். இன்று காலையில் தோட்டத்தில் கருப்பசாமி பிணம் சாக்கில் கிடந்ததைப் பார்த்துவிட்டு வீரவநல்லூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் தப்பியோடிய தொழிலாளி ஞானமுத்துவைத் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in