பல்லக்கு தூக்குவதில் இருதரப்பினர் மோதல்... எரிக்கப்பட்ட வீடுகள், எஸ்ஐ காயம்: பாபநாசம் அருகே பதற்றம்

தீ வைத்து எரிக்கப்பட்ட வீடு
தீ வைத்து எரிக்கப்பட்ட வீடு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கோயில் திருவிழாவின்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் வீடுகள் தீக்கிரையானது. காவல்துறையினர் தாக்கப்பட்டு அவர்களது வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள ராஜகிரி அய்யனார் கோயில் திருவிழா நேற்று நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக கோயில் வழக்கப்படி சுவாமி வீதிஉலா நடைபெற்றது. சுவாமியை அலங்கரித்து பல்லக்கில் வைத்து ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து வந்தனர். அப்போது பல்லக்கு தூக்குவதில் இரு பிரிவினைக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் நடுரோட்டில் சாமியை இறக்கிவைத்து விட்டு இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த மோதல் குறித்த விவரம் அறிந்ததும் பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், பாபநாசம் காவல்துறை கண்காணிப்பாளர் பூரணி, ஆய்வாளர் அழகம்மாள் உள்ளிட்டவர்கள் விரைந்து வந்து இரு தரப்பினரிடையே பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து நடுரோட்டில் இருந்த சாமி சிலை முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோவிலையடைந்தது.

அதன் பின்னர் நேற்று இரவு வருவாய்த்துறையினர், காவல்துறையினர் ஆகியோர் இருதரப்பினரிடமும் மீண்டும் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கூடிய இரு தரப்பினரிடையே எதிர்பாராத விதமாக மீண்டும் கலவரம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருதரப்பும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மூன்று வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இந்த மோதலில் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜீப்பின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. கல் வீச்சில் காயமடைந்த கபிஸ்தலம் உதவி ஆய்வாளர் ராஜ்கமல் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. சம்பவ இடத்திற்கு தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி நேரில் வந்திருந்து பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார். மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in