
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியின் லைவ் ஒளிபரப்பின் இடையே திடீரென முடக்கம் நேரிட்டதால், அவற்றை ஹாட்ஸ்டார் தளத்தில் ரசித்து வந்த கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் நேரடி ஒளிபரப்பு ஓடிடி தளம் வாயிலாகவும் காணக்கிடைக்கிறது. டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளம் இதனை ஒளிபரப்பி வந்தது. பரபரப்பான ஆட்டத்துக்கு இடையே திடீரென ஹாட்ஸ்டார் தளம் துவள ஆரம்பித்தது.
சில இடங்களில் லேப்டாப், டிவி, செல்போன் என சகல திரைகளிலும், ஹாட்ஸ்டார் தளமும், ஓடிடி செயலியும் முடங்கின. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பிப் போனார்கள். மின்னணு சாதனத்தில் கோளாறா அல்லது ஓடிடி தளத்தின் துவளலா என விளங்காது தவித்தார்கள். வழக்கம்போல சமூக ஊடகங்களில் இது தொடர்பான கேள்விகளை கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்ப ஆரம்பித்ததில், ’ஹாட்ஸ்டார்’ இன்றைய ட்ரெண்டிங்கில் முளைத்தது.
இம்மாதிரியான தொழில்நுட்ப பிரச்சினைகள் எழுந்தால், தொடர்புடைய ஓடிடி தளங்களின் சார்பில் அவர்களது சமூக ஊடகக் கணக்குகளில் ஏதேனும் விளக்கம் வெளியிடுவார்கள். ஆனால் சில மணி நேரங்களுக்கு அப்பாலும் நீடித்த தொழில்நுட்ப பிரச்சினை குறித்து ஹாட்ஸ்டார் தரப்பில் விளக்கம் ஏது வெளியாகாத காரணத்தினால், கிரிக்கெட் ரசிகர்கள் கொதிப்பில் தங்களது கண்டனங்களை பதிந்து வருகின்றனர். இதனிடையே ஓரிரு மணி நேர இடைவெளியில் ஆங்காங்கே ஹாட்ஸ்டார் தொடர்பு இயல்புக்கு திரும்பியதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.