கள்ளக்குறிச்சி மாணவி உடலைப் பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம்?

கள்ளக்குறிச்சி மாணவி உடலைப் பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம்?

கள்ளக்குறிச்சி கனியாமூரில் மரணமடைந்த மாணவியின் தந்தை தாக்கல் செய்ய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி கடந்த 13-ம் தேதி அன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் மாணவியின் தந்தை ராமலிங்கம் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. மறு பிரேத பரிசோதனையின் போது மாணவியின் தந்தை மற்றும் அவரது வழக்கறிஞர் உடன் இருக்கலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தங்கள் சார்பில் ஒரு மருத்துவர் உடன் இருக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை முறையீடு செய்தார். அதனை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதனையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய எந்த தடையும் இல்லை என்று கூறியிருந்தது. அதனையடுத்து அவரது உடல் நேற்று முன்தினம் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தாக்கல் செய்திருந்த மேல் முறையிட்டு மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், நீங்கள் சொல்லும் மருத்துவரை ஏன் நியமிக்க வேண்டும் என்று மாணவியின் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

அதனையடுத்து தமிழக அரசின் சார்பில், மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை உயர்நீதிமன்றம் தெரிவித்த வகையில் மாணவி குடும்பத்திற்கு முறைப்படி தகவல் சொல்லப்பட்டு, அதன் பிறகு பரிசோதனை நடைபெற்றது. முழு பரிசோதனையும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பதில் அளிக்கப்பட்டது. அதனால் மாணவியின் தந்தை தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மாணவியின் உடலை அடக்கம் செய்வது குறித்து உயர்நீதிமன்றமே முடிவு எடுக்கும். நீங்கள் தேவைப்பட்டால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறி மாணவியின் தந்தை மனுவை தள்ளுபடி செய்தது.

அதனையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ள மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள அவரது பெற்றோருக்கு உத்தரவிடக் கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சற்று முன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கு விசாரணையின் போது மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்த சட்ட போராட்டம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in