புதுவையில் ஜெர்மன் தம்பதியர் வீட்டில் ரகசிய அறை கண்டுபிடிப்பு: சோழர் கால வெண்கலச்சிலைகள் மீட்பு

புதுவையில் ஜெர்மன் தம்பதியர் வீட்டில் ரகசிய அறை கண்டுபிடிப்பு: சோழர் கால வெண்கலச்சிலைகள் மீட்பு

புதுச்சேரியில் ஜெர்மன் தம்பதியின் சொகுசு பங்களாவில் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சோழர் காலத்து வெண்கல சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி இரும்பை கொட்டக்கரை ஆரோவில்லில் ஜெர்மன் நாட்டினருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் பழங்கால சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நீதிமன்ற உத்தரவு பெற்று அந்த வீட்டில் சோதனை மேற்கொள்ள நேற்று சென்றனர். அப்போது, ஜெர்மன் நாட்டு தம்பதியான பாப்போ பிங்கல் மற்றும் மோனா பிங்கல் ஆகியோர் போலீஸாரைத் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை மீறி போலீஸார் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தியதில் சிலைகள் ஏதும் கிடைக்கவில்லை. தொடர் சோதனையில் ஹாலிவுட் திரைப்படத்தில் வருவது போல வீட்டின் முதல் தளத்திற்கு செல்லக்கூடிய படிக்கட்டுகள் மறைத்து கட்டப்பட்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். பின்னர் முதல் தளத்தில் உள்ள படுக்கையறையின் மேல் மாடியில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பழங்கால வெண்கலச்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர். நடராஜ், அம்மன், சந்திரசேகரர் ஆகிய மூன்று சிலைகளுக்கும் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் மூன்று சிலைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்டதற்கான ஆவணங்களில் ஜெர்மன் தம்பதி கையெழுத்திடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரும்பை விஏஓ ராஜா மற்றும் கிராம உதவியாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலையில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன

சர்வதேச சந்தைகயில் பல கோடி ரூபாய் மதிப்புடைய இந்த சிலைகளை ஜெர்மன் நாட்டு தம்பதி மேலும் சில காட்சிப்பொருட்களைப் பெற்று அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டிருந்ததாகவும், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியதாகவும் விசாரணையில் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் பாப்போ பிங்கல் கட்டிடக்கலை நிபுணர் என்பதால் ஹாலிவுட் திரைப்பட தரத்தில் ரகசிய அறைகளை அமைத்து வீட்டை கட்டி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவிலிருந்து ஜெர்மனி நாட்டிற்குச் சிலைகளை இந்த தம்பதி கடத்தி வந்தனரா அல்லது இந்த சிலைகள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in