1971-ல் திருட்டு; 2022-ல் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: 41 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக‌ம் வருகிறது சோழர் காலத்து சிலை

1971-ல் திருட்டு; 2022-ல் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: 41 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக‌ம் வருகிறது சோழர் காலத்து சிலை

1971-ம் ஆண்டு திருடுபோன 12-ம் நுற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் கடந்த 1971-ம் ஆண்டு கோயிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த பார்வதி சிலை, நடராஜர் சிலை, கோலு அம்மன் சிலை உட்பட 5 பஞ்ச லோக சிலைகள் திருடப்பட்டிருப்பதாக கடந்த 2019-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் கே.வாசு என்பவர் புகார் அளித்தார். மேலும் கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இந்த சிலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், அதனை கண்டுபிடிக்கக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியங்கள் மற்றும் ஏல மையங்களில் திருடு போன சிலைகளை தீவிரமாக தேடி உள்ளனர். அப்போது அமெரிக்காவின் போன்ஹாம்ஸ் ஏல இல்லத்தில் 50 செமீ உயரம் கொண்ட சோழர் காலத்து பார்வதி சிலை ஒன்று இருப்பதை சிலை கடத்தல் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள பார்வதி சிலையின் புகைப்படத்தை வைத்து ஒப்பிடும் போது நடனபுரீஸ்வரர் கோயிலில் காணாமல் போன பார்வதி சிலை என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

மேலும் மாநில தொல்லியல் துறையின் நிபுணரும் இதை உறுதி செய்ததையடுத்து இந்த பார்வதி சிலை 12-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும், 16 கோடிக்கு மேல் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1971-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட இந்த சிலை நியூயார்க்கில் விற்கப்பட்டது தெரியவந்தது. மேலும் ஆவணங்களை அடிப்படையாக வைத்து அமெரிக்காவில் உள்ள ஏல இல்லத்தில் இருந்து யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் பார்வதி சிலையை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விரைவில் தாண்டந்தோட்டத்தில் உள்ள நடனபுரீஸ்வரன் சிவன் கோயிலில் பார்வதி சிலை வைக்கப்படும் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in