51 கோடி தமிழக அரசு கொடுக்காததால் ஆத்திரம்; 21 லட்சம் செட் ஆஃப் பாக்ஸ் துண்டிப்பு: தனியார் நிறுவன இயக்குநர் கைது

51 கோடி தமிழக அரசு கொடுக்காததால் ஆத்திரம்; 21 லட்சம் செட் ஆஃப் பாக்ஸ் துண்டிப்பு: தனியார் நிறுவன இயக்குநர் கைது

தமிழக அரசு கேபிள் டி.வியின் 21 லட்சம் செட் ஆஃப் பாக்ஸ் கட்டுப்பாட்டு மென் பொருள் கருவியை துண்டித்த தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார். 51 கோடி ரூபாய் நிலுவை தொகையை அரசு கொடுக்காததால் இந்த செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.எஸ்.ராஜன். இவர் பாலாஜி மிஷின்ஸ் மற்றும் மந்திரா டெக்னாலஜிஸ் என்ற பெயர்களில் மும்பையில் இரு நிறுவனங்கள் நடத்தி வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் சார்பில் 612 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 36.40 லட்சம் செட் ஆஃப் பாக்ஸ்கள் வழங்குவதற்கான டெண்டரை ராஜன் தனது இரு நிறுவனங்கள் பெயரில் எடுத்ததுடன், செட் ஆஃப் பாக்ஸ்களுக்கு 2020-ம் ஆண்டு வரை வாரண்டியும், அதன் பின் சர்வீஸ் நீட்டிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்குவதாக உத்தரவாதம் அளித்து, செட் ஆஃப் பாக்ஸ்களை வழங்கியதுடன் அதற்கான சர்வீஸ் செய்யும் பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் பெற்று செய்து வருகிறார்.

இந்நிலையில் டெண்டர் நடைமுறைகளை வி.எஸ்.ராஜன் பின்பற்றாமல் சில முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி 612 கோடி ரூபாய் டெண்டரில் 51 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் மூலம் பிடித்தம் செய்யப்பட்டு மீதமுள்ள தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வி.எஸ்.ராஜன் பலமுறை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்துடன் முறையிட்டு வந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட டெண்டர் தொகையில் பிடித்தம் செய்யப்பட்ட 51 கோடியை உடனடியாக வழங்காவிட்டால் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவன செட்ஆஃப் பாக்ஸ்களை இணைக்கும் மென் பொருள் இணைப்பை துண்டித்து விடுவதாக மிரட்டி கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் 19-ம் தேதி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் மென் பொருள் இணைப்பு துண்டிக்கப்பட்டு 21 லட்சம் செட்ஆஃப் பாக்ஸ் சேவை பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

செட்ஆஃப் பாக்ஸ் சேவை பாதிப்பு விரைவில் சரிசெய்யப்படும் என தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சைபர் க்ரைம் போலீஸார் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் வி.எஸ்.ராஜன் மீது தகவல் தொழிற்நுட்பச் சட்டம் 66 மற்றும் 44-ஐ ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in