`மனைவி, பிள்ளைகளை வைத்து வருமானமின்றி சிரமப்படுகிறேன்'- தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி கண்ணீர்

`மனைவி, பிள்ளைகளை வைத்து வருமானமின்றி சிரமப்படுகிறேன்'- தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி கண்ணீர்

முதுகுளத்தூர் அருகே சாலை விபத்தில் இரண்டு கால்களை இழந்த மாற்றுத்திறனாளி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயன்றவரை போலீஸார் காப்பாற்றினர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே புளியங்குடியை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் திருமால். இவருக்கு மனைவி, ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளனர். சாலை விபத்தில் இரண்டு கால்களை இழந்த மாற்றுத் திறனாளியான இவர், அரசு இலவச வீடு கட்டி தர வேண்டும், கடை நடத்த ஊராட்சி நிர்வாகம் உரிமம் வழங்க வேண்டும், வெவ்வேறு இடங்களுக்கு செல்ல மூன்று சக்கர நாற்காலி சைக்கிள் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களில் கோரிக்கை மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இந்த நிலையில், மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க இன்று (டிச.19) ராமநாதபுரம் வந்தார். திடீரென ஆவேசமடைந்த அவர், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். இது குறித்து திருமால் கூறுகையில், "விபத்தில் கால்களை இழந்த நான் எந்த வேலையும் செய்ய இயலாத நிலையில் உள்ளேன். இதனால் குடும்பம் நடத்த வருமானமின்றி மனைவி, குழந்தைகளுடன் சிரமம் அடைந்து வருகிறேன். மூன்று சக்கர நாற்காலி சைக்கிள் கேட்டு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மனு அளித்தும் பல்வேறு காரணங்கள் கூறி மனு நிராகரிக்கப்பட்டது.

அரசின் இலவச வீடு, கடை நடத்த உரிமம் கேட்டு ஏற்கெனவே 4 முறை விண்ணப்பித்திருந்தேன். மேலும் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்தேன். இதுவரை 6 மனு கொடுத்தும் கடந்த ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. வருமானமின்றி சிரமப்படும் நான் வாழ பிடிக்காமல் உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றேன். எனது நிலை, குடும்ப சூழ்நிலை கருதி என் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், கருணைக்கொலை செய்து கொள்ள எனக்கு அனுமதி அளிக்க வேண்டும்" என்றார் வேதனையுடன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in